

புதுடெல்லி: போர்ப் பதற்றம் நிலவும் வளைகுடா நாடுகளில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வரை 280 விமானங்களில், 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக டிஜிசிஏ கூறியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நேற்று 8-வது நாளை எட்டியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால் வளைகுடாவில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வளைகுடா நாடுகளில் இருந்து இந்திய மற்றும் மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் வெள்ளிக்கிழமை இரவு வரை 52,360 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்த விமானங்களில் 184 விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் இயக்கின. அதைத் தொடர்ந்து 85 ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) விமானங்களும் 11 சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வழக்கமான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய விமான நிறுவனங்கள் தாங்கள் பெறும் ஸ்லாட்களை பொறுத்து விமானங்களை இயக்குகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் நிலைமை ஸ்திரமற்றதாக இருக்கும் நிலையில் துபாய் விமான நிலையம் நேற்று காலை மூடப்பட்டது.
இந்நிலையில் ‘எக்ஸ்’ தளத்தில் ஐக்கிய அரசு அமீரகம் நேற்று காலை வெளியிட்ட பதிவில், “துபாய்க்கு செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தயவுசெய்து விமான நிலையம் செல்ல வேண்டாம். இதில் மாற்றம் இருந்தால் பகிர்ந்து கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.