ஹரியாணாவில் யாருக்கு ஆதரவு? - துஷ்யந்த் சவுதாலா இன்று ஆலோசனை

ஹரியாணாவில் யாருக்கு ஆதரவு? - துஷ்யந்த் சவுதாலா இன்று ஆலோசனை
Updated on
1 min read

ரோதக்

ஹரியாணா தேர்தலில் கிங் மேக்கராக துஷ்யந்த் சவுதாலா உருவெடுத்துள்ள நிலையில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஹரியாணாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் வென்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது.

லோக்தளம் ஓரிடத்திலும், மற்ற கட்சிகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதில் 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக முயன்று வருகிறது. இந்த எம்எல்ஏக்கள் ஏற்கெனவே டெல்லி வந்து பாஜக தலைவர்களை சந்திக்க தயாராக உள்ளனர்.

சுயேச்சை எம்எல்ஏக்களில் 3 பேர் பாஜகவில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்கள் ஆவர். அவர்கள் பாஜகவை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியான நிலை ஏற்படும் சூழலில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. முதல்வர் பதவியை துஷயந்த் சவுதாலாவுக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் சுயேச்சைகள் மட்டுமின்றி துஷ்யந்த் சவுதாலாவின் ஆதரவை பெறவும் பாஜக தலைமை முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் துஷ்யந்த் சவுதலாவின் ஆதரவு முக்கியமாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in