

பெங்களூரு
கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவின் வீடு மற்றும் மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்தபோது கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவி வகித்தவர் பரமேஸ்வரா. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி வருபவர்.
இந்தநிலையில் தும்கூரூ உள்ளிட்ட இடங்களில் உள்ள பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு முறைகேடு புகாரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
(தும்கூரூவில் உள்ள பரமேஸ்வராவின் சித்தார்தா குழும கல்வி நிறுவனங்கள்)
இதுகுறித்து பரமேஸ்வரா கூறுகையில் ‘‘எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது எனத் தெரியவில்லை. நான் முறைகேடு எதிலும் ஈடுபடவில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ சோதித்து பார்த்துக் கொள்ளலாம். வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன்’’ எனக் கூறினார்.