காஷ்மீரில் சஜகநிலை; மக்கள் சுதந்திரமாக செல்ல முடிகிறது: ராணுவ தளபதி உறுதி

காஷ்மீரில் சஜகநிலை; மக்கள் சுதந்திரமாக செல்ல முடிகிறது: ராணுவ தளபதி உறுதி
Updated on
1 min read

ராஞ்சி
காஷ்மீரில் நிலை சகஜமாகி விட்டது, மக்கள் சுதந்திரமாக எங்கும் சென்று வருகின்றனர் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் ஒப்புதல் மூலம் ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு நீக்கியது.

மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பகுதிகளாக பிரித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இதனால் காஷ்மீரில் கடந்த சில பல நாட்களாக அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. அங்கு தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீரில் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அந்நாடு கூறி வருகிறது. அத்துடன் காஷ்மீர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயற்சி எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. அன்றாட பணிகளை மக்கள் செய்கின்றனர். அவர்களின் அவசியமான பணிகள் எதுவும் தடை செய்யப்படவில்லை. மக்கள் எங்கும் சுதந்திரமாக சென்று வருகின்றனர்.

கடைகள் திறந்துள்ளன. வாகனங்கள் சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மக்கள் வழக்கம்போல் இயங்க முடிகிறது. பள்ளிகள் திறந்துள்ளன.

தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஒருகாலத்தில் இருந்தவர்கள் மட்டுமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in