

புதுடெல்லி,
ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் நம் அந்தரங்க உரிமை பறிபோகிறது, இதனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டையே துறந்து தனியுரிமையைக் காக்கலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா செவ்வாயன்று கவலை வெளியிட்டுள்ளார்.
டார்க் வெப் மூலம் 5 நிமிடங்களில் ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க முடிவதான அபாயகரமான போக்கை ஆன் லைன் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தி வருகின்றன இது தனக்கு பெரும் கவலையளிப்பதாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அப்பாவிகள் ஆன்லைனில் வசைபாடப்படுகின்றனர், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர், சமூக வலைத்தளங்களில் அனாமதேயர்கள் சேற்றை வாரி இரைப்பதன் மூலம் செல்வாக்கைப் பெற்று வருகின்றனர். வெறுப்பைப் பரப்புவதும், குழந்தைகள் மீதான பாலியல் வக்ரங்களையும் தூண்டி விடுவது தடுக்கப்படவில்லை. இத்தகைய குற்றவாளிகளை தடம் கண்டு தண்டிக்க வேண்டும். பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களுடன் பேசி அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு இந்தப் புலத்தில் அவ்வளவு நிபுணத்துவம் இல்லை.
“யாரோ ஒருவர் என் மீது வசையும் கேலியும் கிண்டலும் ஏன் பிரயோகிக்க வேண்டும்? என்னுடைய குணாம்சம் பற்றி ஏன் பொய்களைப் பரப்ப வேண்டும்? அரசு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் ஆனால் தனி நபர்கள்? இதற்கான தீர்வுதான் என்ன?” என்று நீதிபதி குப்தா உண்மையில் கவலையை வெளியிட்டார்.
“தொழில்நுட்பம் போகும் பாதை அபாயகரமானதாக இருக்கிறது. நான் என் ஸ்மார்ட் போனையே துறந்து விடலாமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளேன். முந்தைய நிலைக்குத் திரும்பிச் செல்லலாமா என்று யோசிக்கிறேன்” என்றார் நீதிபதி குப்தா.
இதனையடுத்து அனிருத்தா போஸ் என்ற இன்னொரு நீதிபதியும் அடங்கிய இந்த அமர்வு சமூகவலைத்தளங்களில் தகவலைப் பகிர்வதற்கான வழிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை சட்ட அமலாக்கப்பிரிவிடம் ஆலோசித்து அதே வேளையில் தனிமனித அந்தரங்க உரிமை பாதிக்கப்படாதவகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு 3 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷனால் தகவல் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதை ஆன்லைன் நிர்வாகிகளே கண்டுபிடிக்க முடியாது என்ற வாதத்தை நீதிபதிகள் அமர்வு ஏற்றுக் கொள்ளவில்லை.
“கண்டுபிடிப்பதற்கான தொழில் நுட்பம் இல்லை என்ற வாதத்தை ஏற்பதற்கில்லை, ஏனெனில் உருவாக்க முடியும் போது அதை நிறுத்தவும் வழி இருக்கவே செய்யும்” என்று அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நீதிபதி குப்தா கூறும்போது, “கண்டிப்பான வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம், அதே வேளையில் என் தனியுரிமையும் பாதிக்கப்படக் கூடாது. யாரோ போலீஸ் கமிஷனர் கேட்கிறார் என்பதற்காக என் சுயவிவரங்களை அளிக்கக் கூடாது, ஆகவே இதற்கான நெறிமுறைகளை வகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் கூறும்போது, ஐஐடி பேராசிரியர் ஒருவர் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷனை உடைக்க முடியும் என்கிறார் என்றார். இணையதளம் தீவிரவாதம் மற்றும் ஆபாசப்படங்களின் இடமாக மாறியுள்ளது என்றார்.
“யார் தகவலை உருவாக்குகிறார்கள் என்பதை தடம் காண முடியாது என்று சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறினால் அவர்களுக்கு இங்கு வேலையில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது” என்றார் வேணுகோபால் ஆக்ரோஷமாக.
இதற்கு உடனடியாகக் குறுக்கிட்ட கபில் சிபல், “அப்போது நீங்கள் (அரசு) மூடிவிடுங்கள், இந்திய அரசு வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்துகிறது, இதைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்த வேண்டியதுதானே” என்றார் வாட்ஸ் அப் சார்பாக வாதாடிய அவர்.
பேஸ்புக் நிறுவனத்திற்காக வாதாடிய முகுல் ரோஹாட்கி சமூகவலைத்தளங்களுக்கும் போலீஸுக்கும் இடையேயான தகவல் பரிமாற்ற வழிநெறிமுறைகளை மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை வடிவமைக்க வேண்டும் என்ற கோர்ட்டின் வாதத்தை ஏற்றார்.
நீதிபதி குப்தா இதற்கு, “ஆம் கொள்கைகளை நாங்கள் வகுக்க முடியாது, அரசுதான் வகுக்க வேண்டும், கொள்கைகளை வகுத்த பிறகு அரசியல் சாசன உரிமையின் படி அது இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியதுதான் எங்கள் வேலை” என்றார்.
துஷார் மேத்தா, நீதிபதி குப்தா தன் ஸ்மார்ட் போன் பயன்பாட்டைத் துறந்து விடலாமா என்று எண்ணுகிறேன் என்று கூறியதை ஆமோதித்து எங்களில் பலர் ஏற்கெனவே இதனை அமல்படுத்தி விட்டோம் என்றார்.