

புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் புனிதத் தலத்துக்கு அருகே இருக்கும் ருத்ரா குகையில் பிரதமர் மோடி தியானம் செய்து திரும்பிய பின், ஏராளமான பயணிகள் தியானம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் வருகைக்கு முன் ஒருவர் மட்டுமே இந்தக் குகையில் தியானம் செய்ய முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 78 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் ருத்ரா குகை அமைந்துள்ளது. இந்தக் குகையை கார்க்வால் மண்டல் விகாஸ் நிகம் (ஜிஎம்விஎன்) அமைப்பு நிர்வகித்து வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இந்த ருத்ரா குகை மக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் வந்து கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, இந்த ருத்ரா குகையில் தியானம் செய்தார். அதன்பின் இந்தக் குகைக்கு மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் கூறுகையில், " இந்தியச் சுற்றுலாவின் தூதர் பிரதமர் மோடிதான். அவர் எந்த இடத்துக்குச் சென்றாலும் அந்த இடம் கவனிக்கப்பட்டு, முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. நம்முடைய மிகப்பெரிய பிராண்ட் அம்பாசிடர் பிரதமர் மோடி.
ருத்ரா குகைக்கு பிரதமர் மோடி இந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி வந்து சென்றார். அதன்பின் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இப்போது இங்கு தியானம் செய்வதற்காக முன்கூட்டியே பயணிகள் முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து கார்க்வால் மண்டல் விகாஸ் நிகம் (ஜிஎம்விஎன்) அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், " பிரதமர் மோடி இந்த ருத்ரா குகைக்கு வந்து சென்ற பின் 4 பேர் முதலில் முன்பதிவு செய்திருந்தார்கள். அதன்பின் ஜூன் மாதம் 28 பேர் முன்பதிவும், ஜூலை மாதம் 10 பேரும், ஆகஸ்ட் மாதம் 8 பேரும், அக்டோபர் மாதம் 10 பேரும் முன்பதிவு செய்துள்ளார்கள். செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இன்னும் முன்பதிவு அதிகரிக்கும் என நம்புகிறோம்.
ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.1,500, மற்றும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தங்குவதற்கு ரூ.999 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் குகை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்திருப்பதால்,தியானம் செய்வதற்கு ஏற்ற இடம். குகைக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். இந்தக் குகை ஒதுக்குப்புறமாக இருப்பதால், எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. செல்போன் வைத்துக்கொள்ள அனுமதி என்றாலும், அவசர நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாம்.
இந்தக் குகையில் மின்சாரம், குடிநீர் போன்றவையும், கழிவறை, ஹீட்டர் வசதியும் இருக்கிறது. விருந்தினராக வருவோருக்கு காலையில் தேநீர், காலை சிற்றுண்டி, மதியம் உணவு, மாலையில் தேநீர், இரவு உணவு ஆகியவை வழங்கப்படும். பயணிகள் கேட்கும் நேரத்தில் உணவு வழங்கப்படும். இந்தக் குகையில் தனியாக ஒரு மணி வைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தேவை ஏற்பட்டு மணியை அழுத்தினால் உடனடியாக உதவியாளர் வருவார்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ