நக்ஸலைட் அச்சுறுத்தல்: 10 மாநில முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

டெல்லியில் இன்று நடந்த 10 மாநில முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறைஅமைச்சர் அமித் ஷா, உள்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்ற காட்சி : படம ஏஎன்ஐ
டெல்லியில் இன்று நடந்த 10 மாநில முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறைஅமைச்சர் அமித் ஷா, உள்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்ற காட்சி : படம ஏஎன்ஐ
Updated on: 
2 min read

புதுடெல்லி,

நக்ஸலைட்டுகள் அச்சுறுத்தல், தாக்குதல்கள் அதிகம் இருக்கும் 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.

நக்ஸலைட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டன.

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பு ஏற்றபின் மாநில முதல்வர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், பிஹார், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

விஞ்ஞான் பவனில் நடக்கும் இந்த கூட்டத்தில் மேற்கண்ட 10 மாநிலங்களின் போலீஸ் டிஜிபிக்கள், தலைமைச் செயலாளர்களையும் அமித் ஷா சந்தித்தார்.

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் கிஷன் ரெட்டி, உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார், துணை ராணுவப்படையின் இயக்குநர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், " நக்ஸலைட்டுகள் ஆதிக்கம், தாக்குதல் மிகுந்த மாநிலங்களின் முதல்வர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக இந்த 10 மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், நக்ஸலைட்டுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், நக்ஸலைட்டுகளை திருத்தி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார் " எனத் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி நக்ஸல் வன்முறைகள் கடந்த 2009-2013-ம் ஆண்டுவரை 8,782 நடந்துள்ளன. ஆனால், கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை 4,969 வன்முறைகளாக 43.4 சதவீதம் குறைந்துவிட்டன.

கடந்த 2009 முதல் 2013-ம் ஆண்டுவரை 3,326 பாதுகாப்பு படை வீரர்கள் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான சண்டையில் உயிர்தியாகம் செய்துள்ளார்கள். ஆனால், 2014-2019-ம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்து ஆயிரத்து 321 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 1400 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த 5 மாதங்களில் மட்டும் 310 நக்ஸலைட்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 88 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிடிஐ

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

X