இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல்

இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல்
Updated on
2 min read

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பெரிய அளவில் எதிர்வினையாற்றும் என இந்தியா எதிர்பார்த்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தூதரக உறவுகளைத் துண்டித்ததோடு, இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை மூடி விட்டார்.

எல்லை வர்த்தகத்தை தடை செய்துவிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே இயங்கி வரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியதோடு, பாலிவுட் படங்களையும் தடை செய்துள்ளார். இன்னும் என்ன செய்யலாம் என பாகிஸ்தான் யோசித்து வருகிறது. ஐ.நா. சபையில் புகார் செய்த கையோடு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் திட்டமிட்டு வருகிறது. இதெல்லாம் போதாது என்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதால், புல்வாமா போன்ற தாக்குதலையும் இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் இம்ரான் கான்.

இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் எடுத்த தூதரக மற்றும் வர்த்தக தடை நடவடிக்கைகள், பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் எந்த அளவுக்கு அந்த நாட்டு ராணுவத்தால் ஆட்டி வைக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் சர்வதேச பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் வீண் முயற்சிதான் இது. ஆசிய பிராந்தியத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி, செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச நாடுகள் ஆபத்தான சூழல் உருவாகிவிட்டதாகக் கருதி காஷ்மீர் பிரச்சினையில் தலையிடும் என பாகிஸ்தான் நம்புகிறது. ஆனால், பாகிஸ்தானின் இந்த பாசாங்கு நாடகத்தை நம்பாத உலக நாடுகள், காஷ்மீர் நடவடிக்கையை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையாகத்தான் பார்க்கின்றன.

இந்தியாவுடன் தூதரக உறவு ரத்து, வான்வெளியை மூடியது, வர்த்தகத் தடை விதித்தது மற்றும் பாலிவுட் திரைப்படங்களை தடை செய்தது போன்ற நடவடிக்கைகளால், உண்மையில் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குத்தான் பாதிப்பு அதிகம். இந்தியாவுடன் தூதரக உறவை மேம்படுத்த பாகிஸ்தான்தான் பெரிதும் விரும்பியது. இந்தியா விருப்பம் இல்லாமல்தான் இருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளால், பாகிஸ்தானுக்குத்தான் பாதிப்பு அதிகம். இதனால், மோசமான பொருளாதார சூழ்நிலையால் பணத்துக்காக சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் வெளிநாடுகளிட மும் கையேந்தி நிற்கும் இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடிதான் ஏற்படும். இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டினால், அதற்கு பெரிய விலையை பாகிஸ்தான் தர வேண்டியது இருக்கும். இது இம்ரான் கானுக்கும் தெரியும்.

தூதரக ரீதியாக பாகிஸ்தானின் எதிர்ப்பை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. காஷ்மீர் நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கருத்து கூறாமல் அமைதியாக இருக்கிறது. ஆனால் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்க முடியாது. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அதிபர் ட்ரம்ப் உளறிய தால்தான் அரசியல் சட்டப் பிரிவு உடனடியாக ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க அனைத்து வாய்ப்புகளையும் பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

காஷ்மீரின் உண்மை நிலையை மறைத்து, தனது முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கான நம்பக் கூடிய ஆதாரங்களை அளித்தால் மட்டுமே ஐ.நா.வின் நிதி நடவடிக்கைக் குழுவின் கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் பெயர் நீக்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.

இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, புல்வாமா போன்ற தாக்குதல்கள் தொடரும் என்றும் அணுஆயுதப் போர் கூட நடக்கலாம் என்றும் மறைமுகமாக எச்சரித்துள்ளார். `புல்வாமாவில் நடந்தது போன்ற தாக்குதல்கள் இனியும் நடக்கலாம். இதுபோல் நடக்கும் என ஏற்கனவே நான் சொன்னேன். பழியை எங்கள் மீது போடப் பார்ப்பார்கள். எங்களை மீண்டும் தாக்கலாம். அப்படிச் செய்தால் நாங்களும் தாக்குதல் நடத்துவோம். அந்தப் போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? யாருக்கும் வெற்றி கிடைக்காது.

உலகம் முழுவதற்கும் பாதிப்புதான் ஏற்படும். இது அணுஆயுதப் போருக்கான மிரட்டல் அல்ல...’ என இம்ரான் பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இம்ரான் ஆற்றிய இந்த உரை மூலம், தீவிரவாதம் குறித்தும் அணு ஆயுதப் பிரயோகம் குறித்தும் பாகிஸ்தான் தலைவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நடந்த காலத்தில் கூட அந்த நாடுகளின் தலைவர்கள் இப்படி பேசியதில்லை. இதுதான் பொறுப்பான தலைவர்களுக்கும் பொறுப்பற்ற தலைவர்களுக்கும் இடையிலான வித்தியாசம். இன்னும் கால தாமதம் ஆகிவிடவில்லை என்பதை பாகிஸ்தான் இப்போதாவது உணர வேண்டும்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.
தமிழில்: எஸ்.ரவீந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in