

மும்பை,
மகாராஷ்டிராவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 4 பேர், இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தனர்.
என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் சிவன்தராராஜே போன்சாலே நவி, மும்பையின் அய்ரோலி தொகுதி எம்எல்ஏ சந்தீப் நாயக், அகோலே தொகுதி எம்எல்ஏ வைபவ் பிசாட் ஆகியோர் நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இதேபோல, காங்கிரஸைச் சேர்ந்த வாட்லா தொகுதி எம்எல்ஏ காளிதாஸ் கோளம்பகரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்கள் 4 பேரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை தனித்தனியாக சபாநாயகரிடம் நேற்று அளித்தனர்.
இவர்கள் 4 பேரும் பாஜகவில் விரைவில் இணைவார்கள் என்று தகவல் வெளியான நிலையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் இன்று 4 முன்னாள் எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில் 240 தொகுதிகளுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இந்த சூழவில் இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
சமீபத்தில் என்சிபி கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சச்சின் அஹிர் கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் சேர்ந்தார். கடந்த மே மாதம் என்சிபி தலைவர் ஜெய்தத் சிர்சாஹரும் சிவசேனாவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள் பாஜகவிலும், சிவசேனா கட்சியிலும் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதற்கு பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணை முகமைகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மிரட்டல் விடுப்பதால்தான் தலைவர்கள் பாஜக, சிவசேனாவில் இணைகிறார்கள் என்று என்சிபி தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்காகவே காங்கிரஸ், என்சிபி கட்சிகளில் இருந்து விலகி, பாஜக அல்லது சிவசேனாவில் இணைகிறோம் என்று எம்எல்ஏக்களும், மற்ற தலைவர்களும் கூறி வருகின்றனர்.
பிடிஐ