கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி- ஜூலை 29-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு

பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் : படம் ஏஎன்ஐ
பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

பெங்களூரு

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் மூலம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. 

ஏற்கனவே, பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவளித்த கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கேஆர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். 

இதன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் 2023-ம் ஆண்டுவரை, அதாவது கர்நாடகத்தி்ல 15-வது சட்டசபைக் காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் 3 பேர் என மொத்தம் 14 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதிநீக்கத்தில், அதிருப்தி எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல், ரோஷன் பெய்க், ஆனந்த் சிங், விஸ்வநாத், சோம்சேகர் உள்ளிட்டோரும் அடங்குவர்.

கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கடந்த செவ்வாய்கிழமை (99 உறுப்பினர்கள்) பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. 

இதைத் தொடர்ந்து, கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கேஆர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். 
இதனால், சட்டப்பேரவையில் 105 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி, 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார்.  சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா இருக்கிறார். 

224 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம்விட்டதால் 207 ஆகக் குறைந்தது. 

பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், எடியூரப்பாவுக்கு ஆதரவாக 105 பாஜக எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ மற்றும் சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தருவதால், நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெல்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in