மக்கள் பணத்தை மோசடி செய்த அம்ரபளி குழும வழக்கு: நீதிமன்ற தீர்ப்பில்  ‘தோனி’ பற்றி சில பத்திகள்

மக்கள் பணத்தை மோசடி செய்த அம்ரபளி குழும வழக்கு: நீதிமன்ற தீர்ப்பில்  ‘தோனி’ பற்றி சில பத்திகள்
Updated on
2 min read

அம்ரபளி குழுமம் மக்களிடம் வீடு கட்டித் தருவதாக பணம் வாங்கி அதனை வேறு நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடி செய்ததாக நடைபெற்ற வழக்கில் ஜூலை 23ம் தேதி தீர்ப்பு வெளியானது. அந்தத் தீர்ப்பு 270 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாகும். அதில் ‘தோனி’ என்ற உபதலைப்பில் சில பத்திகள் இடம்பெற்றுள்ளன.

அம்ரபளி குழுமத்தின் விளம்பரத் தூதராகச் செயல்பட்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி.  இதில் இந்நிறுவனத்தின் மோசடிகள் பற்றிய தடயவியல் தணிக்கை அறிக்கையில் தோனியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

துணைத்தலைப்பில் ‘எம்.எஸ்.தோனி’ என்று காணப்படும் அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது என்னவெனில் அம்ரபளி சபையர் டெவலப்பர்ஸ் தனியார் நிறுவனம் அம்ரபளி குழுமத்திலிருந்து பெற்ற ரூ.42.22 கோடியிலிருந்து ரீதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் தனியார் நிறுவனத்திற்கு 2009-2015 காலக்கட்டங்களில் ரூ. 6.52 கோடி அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது அம்ரபளி குழுமத்திற்கும் ரீதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அம்ரபளி குழ்மத்தின் சிஎம்டி அனில் குமார் என்பவர் பெயரில் இருந்தது. ஆனால் அம்ரபளி குழுமம் சார்பாக இவர் ஒப்பந்தம் இடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதாக குழுமத்தின் எந்த ஆவணங்களிலும் இல்லை. 

இந்த ஒப்பந்தத்தில் 2009 நவம்பர் தேதியிடப்பட்ட ஒன்றில்  ’ரீதி ஸ்போர்ட்ஸ் பிரதிநிதி ஒருவருடன் தோனி 3 நாட்கள் சேர்மனுடன் இருப்பார்’ என்ற நிபந்தனை இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் ஆவணங்கள் எதுவும் இல்லை. 

மார்ச் 2015-ன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் ஒன்றில் ’இந்தக் குழுமத்தின் விளம்பர லோகோ ஐபிஎல் 2015-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல்வேறு இடங்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்’ என்று உள்ளது. 

தீர்ப்பின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த தடயவியல் தணிக்கை அறிக்கை என்ன கூறுகிறது என்றால், “ரீதி ஸ்போர்ட்ஸ் அமரபளி குழுமம் இடையிலான இந்த ஒப்பந்தம் வெறும் காகிதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக எந்த ஒருவரின் கையெழுத்தும் காணப்படவில்லை. ரீதி ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் அருண் பாண்டே சார்பாகவும் எந்தத் தீர்மானமும் இதில் காணப்படவில்லை.” 

இதனையடுத்து இந்த அறிக்கை வந்தடைந்த முடிவு என்னவெனில்,  “ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் தனியார் நிறுவனத்திற்கு பணம் அளிக்க மேற்கொண்ட போலி ஒப்பந்தம். அதாவது வீடு வாங்குவதற்காக மக்களிடமிருந்து பெற்ற பணம் தவறாகவும் சட்ட விரோதமாகவும் ரீதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை அவர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பான ஒப்பந்தங்கள் எங்கள் பார்வையில் சட்டத்தின் சோதனையில் நிற்காது” என்று கூறியுள்ளது. 

இன்னொரு துணைத்தலைப்பு:

இந்த அறிக்கையில் இன்னொரு துணைத்தலைப்பு “அம்ரபளி மாஹி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்” ஆகும். இந்தத் தலைப்பின் கீழ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சாக்‌ஷி சிங் தோனியின் ((நிறுவனத்தின் இயக்குநர்)  கணவரான மகேந்திர சிங் தோனி   அம்ரபளி குழுமத்தின் விளம்பரத் தூதராக இருந்துள்ளார், மேலும் அம்ரபளி குழுமத்தின் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக நிறைய பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்த அறிக்கை வந்தடைந்த முடிவு என்னவெனில், முதற்கட்ட விசாரணைகளின் படி அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் இந்த பரிவர்த்தனைகளில் மீறப்பட்டுள்ளது. அம்ரபளி குழுமம் தொடர்பான மோசடி நிதி நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. 

நீதிமன்றம் தனது ஜூலை 23ம் தேதி தீர்ப்பில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.  மேலும், “இந்த தடயவியல் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ள, வீடு வாங்க மக்கள் கொடுத்த பணம் எந்த நிறுவனத்தின் கையில் இருந்தாலும் வேறு நிறுவன இயக்குநர்கள் மற்றும் பிறரிடம் இருந்தாலும் அந்தத் தொகை இன்னும் ஒரு மாதத்தில் கோர்ட்டில் டெபாசிட் செய்யப்பட வேண்டும், இல்லையெனில் முறையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in