Published : 22 Jul 2019 10:10 AM
Last Updated : 22 Jul 2019 10:10 AM

கடந்த 14 மாதங்களில் ரூ.5,851 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை: சென்னையில் மட்டும் ரூ.184 கோடி

பிரதிநிதித்துவப்படம்

 

 

இந்தூர், பிடிஐ

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2019 மே மாதம் வரையிலான 14 மாதங்களில் மட்டும் ரூ. 5 ஆயிரத்து 851.41 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்களை நன்கொடையாளர்கள் வாங்கியுள்ளார்கள்.

 

பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைமை இடம் டெல்லியில்தான் இந்த தேர்தல் நிதிப்பத்திரங்களில் 80 சதவீதம் பணமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த தகவல் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுச் செய்து பெறப்பட்டுள்ளது.

 

மத்தியப்பிரதேசம் நீமுச் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் எனும் சமூக ஆர்வலர் எஸ்பிஐ வங்கியில் இருந்து இந்த தகவல்களைச் சேகரித்துள்ளார்.

 

இதுகுறித்து சந்திரசேகர் கவுட் நிருபர்களிடம் கூறியதாவது:

 

டெல்லியில் மட்டும் தேர்தல் நிதிப்பத்திரங்கள் 10 கட்டங்களாக ரூ.874.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், விற்பனை  செய்யப்பட்ட பத்திரங்களின் மதிப்பைக் காட்டிலும், அங்கு பணமாக மாற்றப்பட்ட பத்திரங்களின் மதிப்பு அதைக்காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும். அதாவதகு, ரூ.4 ஆயிரத்து715.58 கோடிக்கு பணமாக நிதிப் பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன

 

மும்பையில் மட்டும் ரூ.ஆயிரத்து 782.36 கோடிக்கு நிதிப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், அதில் 7 சதவீதம் மட்டுமே அதாவது, ரூ121.13 கோடிக்கு மட்டுமே பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில் ரூ.ஆயிரத்து 389 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையான நிலையில், அதில் 12 சதவீதம், அதாவது, ரூ.167.50 கோடிக்கு மட்டுமே பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன.

பெங்களூரு நகரில் ரூ.195 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையான நிலையில், அதில் ஒரு சதவீதம், அதாவது, ரூ.1.5 கோடி மட்டுமே பணமாக மாற்றப்பட்டுள்ளது.

 

ஹைதாராபாத்தில் ரூ.806.12 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையான நிலையில் அதில் ரூ.512.30 கோடி மட்டுமே பணமாக மாற்றப்பட்டுள்ளன.

 

இதேபோன்று சென்னையில் ரூ.184.20 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையான நிலையில், அதில் ரூ.51.55 கோடி மட்டுமே பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன.

 

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் ரூ.315.76 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையான நிலையில் அதில் ரூ.226.50 கோடிக்கு மட்டுமே பணமாக மாற்றப்பட்டுள்ளது.

 

2018-ம் ஆண்டு மார்ச் முதல் 2019 மே மாதம் வரை ரூ.5 ஆயிரத்து 851.41 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. அதில் 10 கட்டங்களாக ரூ.5 ஆயிரத்து 831.16 கோடிக்கு பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன.

இதில் மீதம் இருக்கும் ரூ.20.25 கோடிக்கு மட்டும் பத்திரங்களுக்கான வாழ்நாள் காலம் முடிந்துவிட்டதால், அவை பணமாக மாற்றப்படவில்லை.

குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குகள் மட்டும் குஜராத்தின் காந்திநகர், குவஹாட்டி,ஜெய்பூர், ராய்பூர், பானாஜி, திருவனந்தபுரம், விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் மட்டும் ரூ.279.70 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.  

எனக்கு கிடைத்த விவரங்களில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாங்கிய நன்கொடையாளர்கள் பெயர் விவரங்களும் தரப்படவில்லை, கட்சிவாரியாக கிடைத்த நிதிப்பத்திரங்கள் விவரமும் தரப்படவில்லை

இவ்வாறு கவுட் தெரிவித்தார்.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக எஸ்பிஐ வங்கியில் மட்டும் விற்பனை செய்யப்படும் பத்திரங்களாகும். இநத் நிதிப்பத்திரங்கள் குறிப்பிட்ட 29 எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிதிப்பத்திரங்கள் ரூ.1000, ரூ.10 ஆயிரம், ரூ.ஒரு லட்சம், ரூ.10 லட்சம், ரூ.ஒரு கோடி ஆகிய மதிப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x