

சலீம் அகமது
புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 50 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொறடா சலீம் அகமது தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது.
அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்ற விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டுமென மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். அதன்படி அவர் தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். விரைவில் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமையவுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக சட்டப்பேரவை கொறடா சலீம் அகமது கூறியது: “நாளை காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். புதிய அமைச்சர்கள் யார், எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம், அமைச்சராக பொறுப்பேற்கும் சட்டப்பேரவை உறுப்பினரின் சாதி, மதம் உள்ளிட்டவையும் பரிசீலிக்கப்படும்.
அதோடு முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு, புதுமுகங்கள் யார், யார் உள்ளிட்டவை குறித்து விவாதிப்போம். இது கட்சியின் கூட்டு முடிவாக இருக்கும். அதன் மீதான இறுதி முடிவை கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
நாங்கள் ஏற்கெனவே சொன்னது போல புதிய அமைச்சரவையில் சுமார் 50 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 2028 பேரவை தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வேண்டி உள்ளது. அதை கருத்தில் கொண்டு காமராஜர் திட்ட மாடலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.