கொல்கத்தா: “மம்தா பானர்ஜிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 50 எம்எல்ஏக்கள் ஒன்றுபட்டுள்ளனர். அவர்கள் சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவார்கள்” என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிஜூ தத்தா கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியமைத்தது. மேற்கு வங்கத்தில் பாஜக 208 இடங்களில் வென்ற நிலையில், திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பிடித்தது. இதனையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் வெளிப்படையாக பிளவு வெடித்துள்ளது.
சமீபத்தில் நடந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மொத்தமுள்ள 80 பேரில் 61 பேர் கலந்துகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக சோபன்தேப் சட்டோபாத்யாய் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரை தேர்வு செய்யும் கடிதத்தில் தாங்கள் கையெழுத்து இடவில்லை என்று தெரிவித்த சந்தீபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகியோரை அக்கட்சி நீக்கியது. இந்தப் போலி கையெழுத்து விவகாரம் குறித்து மேற்கு வங்க அரசு சிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி பேசிய ரிஜு தத்தா, “மேற்கு வங்கத்தில் தற்போது மகாராஷ்டிரா பாணி அரசியல் சூழல் நிலவுகிறது. நாங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளோம். சுமார் 50 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்பதால், எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி இருப்பாரே தவிர, சோபன்தேப் சட்டோபாத்யாய் இருக்க மாட்டார். மேலும், அவர்களுக்கு பெரும்பான்மை உள்ளதால், கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தக்கவைத்துக்கொள்ள அவர்களையே அனுமதிக்க வேண்டும்” என்றார்.
‘தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணமூல் தலைவர்கள் பலர் பாஜகவுக்கு மாறி வருகின்றனர். சிலர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து வருகின்றனர். முறைகேடுகள் காரணமாக மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் கடந்த மாதம் 29-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் திரிணமூல் வேட்பாளராக போட்டியிட்ட ஜஹாங்கீர் கான் கடைசி நேரத்தில் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதேபோல ஏராளமான திரிணமூல் தலைவர்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி வருகின்றனர். புதிய முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு சில திரிணமூல் எம்எல்ஏக்கள் பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
திரிணமூல் எம்பி ககோலி கோஷ் அண்மையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் அவர் நெருக்கமாக உள்ளார். தற்போதைய சூழலில் திரிணமூல் காங்கிரஸுக்கு 28 மக்களவை எம்பிக்கள், 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். இதில் 20 எம்பிக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதும் கவனிக்கத்தக்கது.
2022-ஆம் ஆண்டில் சிவசேனா கட்சி இரண்டு பிரிவுகளாக உடைந்தது. அதன் விளைவாக அப்போதைய உத்தவ் தாக்கரே தலைமையிலான 'மகா விகாஸ் அகாதி' கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது.
சிவசேனாவின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருந்ததால், பாஜக ஆதரவுடன் அவர் முதல்வரானார். மேலும், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஷிண்டேவுக்கே கிடைத்தது. அதே பாணியில் இப்போது திரிணமூல் காங்கிரஸில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.