

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் நேற்று அதிகாலை 5 சிறிய ஒராங்குட்டான் குட்டிகள் உலா வந்த அரிதான காட்சி உள்ளூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, அந்த அரியவகை குரங்குகளை வனத்துறையினர் உடனடியாக சென்று மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து பாலசோர் கோட்ட வன அதிகாரி பிரதீக் பிரகாஷ் இந்தால்கர் கூறியதாவது: பாலசோரின் போக்ராய் பகுதியில் உள்ள படாபாய் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை 6 மணியளவில் 5 இளம் ஒராங்குட்டான்கள் சுற்றித் திரிவதை பொதுமக்கள் கண்டுள்ளனர். அரிதான இந்த உயிரினங்கள் குறித்து தகவல் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து, ஒரு மணி நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடியாகச் தலையிட்டு, அந்த விலங்குகளைப் பத்திரமாக மீட்டனர். சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் இந்த ஒராங்குட்டான்கள் மாநிலத்துக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட 5 குட்டி ஒராங்குட்டான்களும் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. மீட்கப்பட்ட ஐந்து குட்டிகளில் நான்கு குட்டிகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளன.
அவை உணவையும் ஓஆர்எஸ் கரைசலையும் உட்கொண்டு வருகின்றன. கால்நடை மருத்துவர்கள் அவற்றைப் பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது வனத்துறை அதிகாரிகளின் நேரடிப் பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் அவை வைக்கப்பட்டுள்ளன. எல்லை தாண்டிய வனவிலங்கு கடத்தலின் பின்னணி குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பிரதீக் பிரகாஷ் தெரிவித்தார்.