1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: டைட்லர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க சிபிஐ-க்கு கோர்ட் உத்தரவு

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: டைட்லர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க சிபிஐ-க்கு கோர்ட் உத்தரவு
Updated on
1 min read

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரை காங்கிரஸ் தலைவர் ஜக்தீஷ் டைட்லர் திசைதிருப்ப முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை விசாரணை செய்து வரும் டெல்லி நீதிமன்றம் விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட தொழிலதிபர் அபிஷேக் வர்மா என்பவரின் வாக்குமூலம் தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று கூடுதல் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் எஸ்.பி.எஸ். லேலர் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் போது கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா கூறும்போது, “வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜக்தீஷ் டைட்லர், இதில் முதன்மை சாட்சியான சுரீந்தர் குமார் கிரந்தி என்பவருடன் உடன்பாடு மேற்கொண்டதாக வர்மா தனது வாக்குமூலத்தில் சிபிஐ-யிடம் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கையின் படி முக்கிய சாட்சியான சுரீந்தருக்கு (இவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) பெரிய தொகை ஒன்றை அளித்ததோடு அவரது மகன் நரீந்தர் சிங் வெளிநாட்டிற்குச் செல்லவும் உதவி புரிந்துள்ளார்.

மேலும் டைட்லர், நரீந்தருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் வர்மாவிடம் தெரிவித்துள்ளார். அதாவத் நரீந்தர் மூலம் தந்தை சுரீந்தருக்கு நெருக்கடி கொடுத்து ஜக்தீஷ் டைட்லருக்கு சாதகமாக தனது வாக்குமூலத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று வர்மா சிபிஐ-யிடம் தெரிவித்துள்ளார்” என்று வாதாடினார்.

2010-ம் ஆண்டு ஜக்தீஷ் டைட்லர் அயல்நாட்டில் உள்ள தனது சகோதரிக்கு ரூ.5 கோடி ஹவாலா மூலம் பணம் அனுப்பியதாக வர்மா புகார் தெரிவித்திருந்தார். ஆனால் பணம் வந்து சேர்ந்த அறக்கட்டளையின் கணக்கு முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இன்று டைட்லர் மீதான வர்மாவின் புகார்கள் குறித்து சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஜூன் 26-ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தது நீதிமன்றம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in