

லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கி உள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பாஜக மூத்த தலைவர்களை சந்திக்காமல் சொந்த மாநிலத்துக்குத் திரும்பினார்.
ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பிரிட்டன் விசா கிடைக்க பரிந்துரை செய்ததாக வசுந்தரா ராஜே மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் மாநில முதல்வர்களின் துணைக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை 9.30 மணிக்கு டெல்லி சென்றார் வசுந்தரா ராஜே. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வசுந்தரா ராஜே டெல்லி சென்ற 4 மணி நேரத்தில் சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியையோ பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையோ அவர் சந்தித்துப் பேசவில்லை. அதேநேரம், பிரதமரையோ, அமித் ஷாவையோ சந்திக்க நேரம் ஒதுக்குமாறு வசுந்தரா ராஜே கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் வசுந்தரா ராஜேவை சந்திக்க பாஜக மூத்த தலைவர்கள் மறுத்துவிட்டதாக வெளியான செய்தி தவறானது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் டெல்லி சென்றார். கூட்டம் முடிந்ததும் ஜெய்ப்பூர் திரும்பிவிட்டார். ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு முன்பு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு பாஜக தலைவர் அமித் ஷா பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதுபோல் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் பிரதமரை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, லலித் மோடி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, வசுந்தரா மீதான அனைத்து குற்றச்சாட்டு களையும் ராஜஸ்தான் பாஜக நேற்று முன்தினம் மறுத்திருந்தது. அதாவது, லலித் மோடிக்கு ஆதரவாக வசுந்தரா கையெழுத்திட்ட ஆவணத்தை பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டதால் அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றனர். இதுபோல், வசுந்தரா மகன் துஷ்யந்த் நடத்தி வரும் ஓட்டல்களில் லலித் மோடி முதலீடு செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் கூறியிருந்தனர். ஜூன் 27 முதல் ஜூலை 2 வரையில் லண்டனில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதை ரத்து செய்தார் வசுந்தரா ராஜே.
காரை முற்றுகையிட முயற்சி
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி விமான நிலையத்திலிருந்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் அணிவகுத்துச் சென்ற ஒரு கார் மீது தொலைக்காட்சி நிறுவனத்தின் கார் ஒன்று லேசாக மோதியது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “முதல்வர் வசுந்தராவின் காரை முற்றுகையிடுவதற்காக சில தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் வேகமாக காரில் சென்றுள்ளனர். அப்போது, முதல்வருடன் சென்ற ஒரு கார் மீது ஒரு தொலைக்காட்சி நிறுவன கார் லேசாக மோதியது. 2 இடங்களில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.
ஊடகவியலாளர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன் மற்றவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புகளை நாங்கள் நடத்துவதுடன் அறிக்கைகளை வெளியிடுவோம்” என கூறப்பட்டுள்ளது.
‘இது ராஜ்ய தர்மம் அல்ல, ராஜே தர்மம்’
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள லலித் மோடிக்கு உதவி செய்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரை பாதுகாக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். இதன்மூலம் அவர் ராஜ்ய தர்மத்தை மறந்து ராஜே தர்மத்தைக் கடைபிடிக்கிறார்” என்றார்.