

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையில் இருந்து 47 அலுவலர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, ஐஐடி கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் மொத்தம் 221 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
என்டிஏவில் பொது இயக்குநர், 2 துணைச் செயலாளர்கள், 8 இயக்குநர்கள், 6 இணை இயக்குநர்கள், 3 துணை இயக்குநர்கள், 2 உதவி இயக்குநர்கள், 2 கண்காணிப்பாளர்கள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் உட்பட 24 பேர் நிரந்தர பதவிகளில் பணியாற்றுகின்றனர். அவர்களின் கீழ் 73 ஒப்பந்த அலுவலர்கள், 124 அவுட்சோர்சிங் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த சூழலில் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு கடந்த ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக வினாத்தாளை தயாரித்த பேராசிரியர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். என்டிஏ அமைப்பில் பணியாற்றும் அலுவலர்கள் சிலருக்கும் வினாத்தாள் கசிவில் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து என்டிஏ அமைப்பில் இருந்து 47 அலுவலர்கள் நேற்று நீக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை மத்திய கல்வித் துறை பிறப்பித்தது. நீக்கப்பட்ட அலுவலர்களில் சிலர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஒரு மாதத்தில் தேசிய தேர்வு முகமை முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.