மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: மறு தேர்வுக்கு அவகாசம் கோரும் சிபிஎஸ்இ மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்

மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: மறு தேர்வுக்கு அவகாசம் கோரும் சிபிஎஸ்இ மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்து வக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

சிபிஎஸ்இ அமைப்பு கடந்த மே 3-ம் தேதி இத்தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் முறைகேடு நடந்துள்ளதாக மறுநாளே குற்றச்சாட்டு எழுந்தது.

ஹரியாணா மாநிலம் ரோத்தக் நகரைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில போலீஸார் கைது செய்து விசாரித்ததில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.

இது தொடர்பாக ஹரியாணா மாணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 15-ம் தேதியன்று, "தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக, அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 4 வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த வேண்டும்" என சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்துவது மிகவும் சிரமம், எனவே மறு தேர்வு நடத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது அவகாசம் தேவை எனக் கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், ஏ.எம்.சாப்ரே அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தது. விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in