

ஜார்க்கண்ட் மின்சார வாரியம் தனது மகனுக்கு அனுப்பியிருந்த ரூ.55 கோடி மின் கட்டண பில்லைப் பார்த்த 55 வயது பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பிறகு சகஜ நிலைக்கு திரும்பினார்.
ராஞ்சியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (31), காத்ரு பகுதியில் உள்ள 2 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மின் கட்டண பில் வந்துள்ளது. அதில் 9.9 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும் அதற்குக் கட்டணமாக ரூ.55,49,88,036-ஐ இன்றுக்குள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிரசாத் கூறியதாவது:
நாங்கள் ஒரு திருமணத்துக்கு வெளியில் சென்றிருந்தோம். பின்னர் வீடு திரும்பியபோது, எனது தாய் குந்தி தேவி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
எனக்கு ரூ.55 கோடிக்கு மின் கட்டண பில் வந்ததுதான் இதற்குக் காரணம். இந்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பே வந்திருக்கும். அவரது ரத்த அழுத்தம் 145-க்கு மேல் இருந்தது. பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம்.
எனது குடியிருப்பின் கீழ் ஒரு சிறிய கடை வைத்திருக்கிறேன். வீட்டில் ஒரு பிரிட்ஜ், 2 ஏ.சி. 3 மின் விசிறிகள், ஒரு இன்வெர்ட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் எனக்கு மின் வாரியம் ரூ.55 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது. நான் உருக்கு ஆலை நடத்தி வருவதாகக் கருதி மின் வாரியம் இந்த பில்லை எனக்கு அனுப்பி வைத்ததா என தெரியவில்லை.
அடிக்கடி மின் தடை ஏற்படும் நிலையில் கோடிக் கணக்கில் பில் வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடு வழங்க மின் வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரசாத் கடந்த முறை ரூ.9,736 மின் கட்டணமாக செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜார்க்கண்ட் மின் வாரியத்தின் ராஞ்சி மத்திய பிரிவு அதிகாரி டி.என்.சாஹு கூறும்போது, “கணினி கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்துள்ளது. பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிரசாத்தின் பில் தொகை நிலுவை ரூ.360 உட்பட ரூ.10,000 தான்” என்றார்.