

‘பத்ம விருதுகளுக்கு உரியவர்களை தேர்வு செய்வதற்கு, பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன. அரசியல் செல்வாக்கு இருந்தால், பத்ம விருதுகள் மட்டுமல்ல நோபல் பரிசு கூட கிடைத்து விடும்’ என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதையடுத்து முதல் முறையாக வரும் ஜூன் 21-ம் தேதி யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பல அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அசோசெம் சார்பில் டெல்லியில் சனிக்கிழமை அன்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், யோகா குரு ராம்தேவ் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள், நோபல் பரிசு ஆகியவை சிறந்த மனிதர்களுக்கு வழங்கப்படுவதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களும் இந்த விருதுகளைப் பெறுவதில் வெற்றி பெறுகின்றனர். பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்படுவதன் பின்னணியில் பல விஷயங்கள் நடக்கின்றன. இந்த ஆண்டு பத்ம விருதுகள் எனக்கு வழங்க இருப்பதாக அறிந்தேன். ஆனால், ‘நான் சன்னியாசி. மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் சேவை செய்வதுதான் என் வேலை. எனவே, விருது வேண்டாம்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதிவிட்டேன். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
நிகழ்ச்சியில் யோகா குறித்து பலர் கேட்ட சந்தேகங்களுக்கு ராம்தேவ் கூறும் போது, “இந்தியாவில் உள்ள 50 சதவீத மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற, தங்களுடைய சொத்துகளை அடமானம் வைக்கும் நிலை உள்ளது. சிகிச்சைக்கான கடனாளிகளாகின்றனர். மருந்துகளால் நோய்களை விரட்டி விட முடியாது. தனிப்பட்ட முறையில் ஒருவர் நினைத்தால் முறையான வாழ்க்கையின் மூலம் நோய்களை விரட்ட முடியும். அதற்கு யோகா மிகச் சிறந்த வழி. மருந்துகள் இல்லாம் ஆரோக்கியமான வாழ்க்கையை இந்தியர்களால் வாழ முடியும்.
யோகா பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறுகின்றனர். மருந்துகளுக்கும் மதுவுக்கும் கொடுக்கும் பணத்தை விட, மனதுக்கும் உடலுக்கும் பயன் தரக்கூடிய யோகா பயிற்சிக்கு கட்டணம் குறைவுதான். மூலிகை மருந்துகளும் மக்களின் நலனுக்காகத்தான் வழங்கி வருகிறோம். வியாபார நோக்கம் இல்லை. இந்தியாவில் யோகாவை ஆர்.எஸ்.எஸ். கட்சியினர் ஊக்குவித்தால், அது சர்ச்சையை கிளப்பி விடும்” என்றார்.