ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் மோடி அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை: கட்கரி

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் மோடி அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை: கட்கரி
Updated on
1 min read

“பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் எந்த நிர்பந்தமும் இல்லை. அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். “நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும், கல்விக் கொள்கை விஷயத்திலும் மோடி அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். நிர்பந்தம் தருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் உத்தரவுப்படி மோடி அரசு செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினர்.

இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் மத்திய அமைச்சரும் பாஜக முன்னாள் தலைவருமான நிதின் கட்கரி, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடி அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். எந்த நிர்பந்தத்தையும் தரவில்லை. மேலும், மத்திய அரக்கு எந்த உத்தரவையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள பிறப்பிக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் எல்லோரும், தங்கள் கருத்துகளை அமைச்சரவைக் கூட்டங்களில் சுதந்திரமாகத் தெரிவிக்கின்றனர். சுதந்திரமாக செயல்படுகின்றனர். மத்திய அமைச்சர்கள் சிலர், மோகன் பாகவத்தை சந்தித்தது அரசியல் ரீதியிலானது.

நான் (கட்கரி), அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், ராஜ்நாத் சிங் உட்பட பலர் ஜன சங்கத்தின் தீவிர உறுப்பினர்கள். இதை சொல்வதற்கு எங்களுக்கு பயம் எதுவும் இல்லை. அமைச்சர்கள் சந்தித்து பேசியது வேறு விஷயங்களுக்காகத்தான். ஆனால், மீடியாக்களில் வந்துள்ள செய்திகளுக்கும் அவர்கள் சந்திப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாஜக தலைவர் அமித் ஷா கூட சமீபத்தில் பாகவத்தை சந்தித்து பேசினார். இதற்கு அரசியல் உள் அர்த்தம் கற்பிக்க கூடாது.

இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

‘மோடி செயல்படும் விதம் சரியில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம், பாஜக தலைவர்கள் சிலர் புகார் சொன்னதாக கூறப்படுகிறதே’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “வெற்றிகரமான நடிகையை பற்றி கிசுகிசுக்கள் எழுதுவது போல், மோடியைப் பற்றியும் பரபரப்பாக எழுதினால் விற்பனை நடக்கும் என்பதற்காக வெளிவரும் செய்திகள் அவை” என்று கட்கரி பதில் அளித்தார்.

‘மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி ஆர்எஸ்எஸ் என்ன நினைக்கிறது?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்தக் கேள்வியை அந்த அமைப்பிடம்தான் கேட்க வேண்டும்” என்று கட்கரி பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in