

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 சொகுசு வீடுகளை வாங்கி உள்ளனர். இந்த வீடுகள் மூலம் அவர்களுக்கு ஓராண்டில் ரூ.1.8 கோடி வாடகை கிடைக்கிறது. இதுதொடர்பாக இருவரிடமும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் (56). அவரது மனைவி பிரஷாகா மாத்தூர் (57). இவர் அந்த மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். இருவரும் ராஜஸ்தான் அரசில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான காலத்தில் கணவன், மனைவி இருவரும் உதய்பூர், ஆல்வார் பகுதிகளில் ரூ.6.16 கோடி மதிப்பில் 40 சொகுசு விடுதிகளை வாங்கி உள்ளனர்.
ராஜஸ்தானின் உதய்பூர், ஆல்வாரில் பழங்கால அரண்மனைகள் உள்ளன. இவற்றைப் பார்வையிட உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக 40 சொகுசு வீடுகளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் வாடகைக்கு விட்டு உள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு ஓராண்டில் ரூ.1.8 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த சொகுசு வீடுகள் தொடர்பாக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இருவரும் கடந்த 29-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ராஜஸ்தானை சேர்ந்த கோயல் பேஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த சில ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால், ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர் தம்பதி 40 சொகுசு வில்லாக்களை வாங்கி உள்ளனர். பின்னர் அதே நிறுவனத்துக்கு 40 வீடுகளையும் குத்தகைக்கு விட்டு உள்ளனர். அந்த நிறுவனம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதிக்கு மாதம் ரூ.1.8 கோடி வாடகை பணம் வழங்கப்படுகிறது.
நாற்பது சொகுசு வீடுகளும் கணவன், மனைவி மற்றும் இரு மகன்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.6.16 கோடி என்று பத்திரப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றின் மதிப்பு அதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. வீடுகளை விற்ற தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளனர். குறிப்பாக பல்வேறு நிலங்களின் வகைப்பாடு மாற்றப்பட்டு இருக்கிறது.
சொத்து விவர பட்டியல்
கடந்த ஜனவரி மாதம் ஐஏஎஸ் அதிகாரி தனது சொத்து விவரப் பட்டியலை அரசிடம் தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் 14 சொத்துகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான பிரஷாகா மாத்தூர் தனது பெயரில் எந்த சொத்தும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இருவரும் முக்கிய சுற்றுலா தலங்களில் 40 சொகுசு வீடுகளை முறைகேடாக வாங்கியிருப்பது அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.