

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள அனுமன் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் மனாவத் தாலுகாவின் யாஷ்வாடி கிராமத்தில் அனுமன் கோயில் உள்ளது. இங்கு கருவறை முன்பாக புதிய வளாகம் அமைக்கப்பட்டு மேற்கூரை போடப்பட்டது. நேற்று சனிக்கிழமை என்பதால் அனுமன் கோயிலில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
இவர்களில் சிலர் புதிய கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரங்களுக்கு இடையே நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாரங்கள் மொத்தமாக சரிந்தது.
அதில், புதிதாக போடப்பட்டிருந்த கான்கிரீட் மேற்கூரை இடிந்து பக்தர்களின் மீது விழுந்தது. அவர்கள் அனைவரும் கான்கிரீட் மற்றும் சாரங்களின் இரும்புக் கம்பி இடிபாடுகளில் சிக்கினர். இதில் 4 பேர் உயிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தை கேள்வி பட்டதும், போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு அதில் சிக்கியிருந்த பக்தர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
காயம் அடைந்த 6 பக்தர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் தேவையான நிதியுதவி அளிக்கப்படும் என மாநில அமைச்சர் மேகனா போர்டிகர் கூறினார்.
அனுமன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.