

லக்னோ: உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு (2027) தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாக உள்ளன. இதில் 3-வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்) தலைவர் சந்திரசேகர் ஆசாத்ஆகியோர் லக்னோவில் நேற்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஒவைசி பேசியதாவது:
ஏஐஎம்ஐஎம் மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்) இணைந்து, ‘சமூக பரிவர்த்தன் மோர்ச்சா’ (எஸ்பிஎம்) என்கிற புதிய கூட்டணி உருவாகியுள்ளது. வரும் தேர்தலில் இந்த கூட்டணி 403 தொகுதிகளிலும் போட்டியிடும். நமது சகோதரர் சந்திரசேகர் ஆசாத், எஸ்பிஎம் கூட்டணியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் இருப்பார். பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கமாக இருக்கும். இவ்வாறு ஒவைசி கூறினார்.