

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான புதிய அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் மீது பல்வேறு புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை இறுதி செய்யும் பணியில் எஸ்ஐடி ஈடுபட்டுள்ளது. எச்எஸ்பிசி வங்கிக் கிளையில் முதலீடு செய்ததாக சமீபத்தில் வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்த 628 பேர் மீது வருமான வரித் துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “கருப்பு பணம் மீட்பு பற்றிய அறிக்கையை எஸ்ஐடி ஓரிரு வாரங்களில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். பின்னர் மத்திய அரசிடமும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்துள்ளது.
2014-15 நிதியாண்டில் பல்வேறு புலனாய்வு அமைப்புகளால் ஒப்பிடப்பட்ட வருவாய் தொடர்பான தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் எஸ்ஐடியை அமைத்தது.
பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் 11 பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழு, ஏற்கெனவே 2 அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில் அதிக மதிப்பு கொண்ட பணப் பரிவர்த்தனைக்கு பான் எண்ணை கட்டாயமாக்க வேண்டும், பணப் பரிவர்த்தனையின் போது டெபிட் கார்டை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரை களை தெரிவித்துள்ளது.