

பாகிஸ்தான் சிறையில் அடைக் கப்பட்டிருந்த லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி (55) நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையின் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குத லுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வியையும் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பரில் லக்வியை ஜாமீனில் விடுதலை செய்ய தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. லக்விக்கு எதிரான சில முக்கிய ஆதாரங்களை அமெரிக்கா வழங்கியது.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு முறை பொது அமைதி பராமரிப்புசட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் லக்வியை உடனடியாக விடுதலைச் செய்ய லாகூர் உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
அதன்பேரில் லக்வி நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார். அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள அடிலா பாத் சிறை வளாகத்தில் குவிந்து அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
சிறையில் லக்வி சகல வசதி களுடன் வாழ்ந்து வருவதாக ஊடகங்களில் ஏற்கெனவே செய்தி கள் வெளிவந்துள்ளன. சிறை யிலேயே அவர் மனைவியுடன் குடும்பம் நடத்த அனுமதிக்கப்பட்ட தாகவும் அதன்மூலம் அவருக்கு மகன் பிறந்ததாகவும் கூறப்படு கிறது.
சர்வதேச நிர்பந்தம் காரண மாகவே லக்வியை கண்துடைப் புக்காக பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. இதன்காரண மாகவே அவரை விடுதலை செய்ய லாகூர் உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது என்று பன்னாட்டு ஊட கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஏமாற்றம் அளிக்கிறது
இந்த விவகாரம் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவே இந்தியா விரும்புகிறது. ஆனால் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல் பட்ட லக்வியை விடுவித்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் லக்வியின் விடு தலையை கடுமையாகக் கண்டித் துள்ளன.