

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உதவி காவல் ஆணையர் (புலனாய்வு) தினேஷ் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2022-ம் ஆண்டு பிப். 5-ம் தேதி, ஆக்ராவின் சிக்கந்திரா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட செக்டார் 15-ல் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த 38 பேர் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 23 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 8 பேர் சிறார்கள் ஆவர். அவர்கள் யாரிடமும் செல்லுபடியாகும் ஆவணம் எதுவும் இல்லை.
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை விதித்தது.
இதைடுத்து 7 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 8 சிறார்களும் குழந்தைகள் இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது அனைவரும் தண்டனை காலத்தை நிறைவு செய்துவிட்டனர். எனவே இவர்கள் 38 பேரும் வாகனங்கள் மூலம் வங்கதேச எல்லைக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் ஜனவரி 13-ம் தேதி எல்லை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.