

உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கான செலவீடு என இரண்டையுமே சமநிலையாகக் கையாள்வது அவசியம். பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏழைகள் மற்றும் தொழிற்துறைக்கு ஆதரவான அரசாங்கமாகும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக லோக்சபா டிவிக்கு அவர் கூறியதாவது:
வளர்ச்சி மற்றும் நிதிப்பற்றாக்குறையைத் தடுப்பது ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையைப் பேணுவது என் முன் உள்ள சவால். உள்கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் வளர்ச்சி வீதத்தைப் பேணுவது குறித்து கவனம் செலுத்துகிறோம். தொழிற்துறை வேகமாக வளர வேண்டும். தொழிற்துறையிலிருந்து நான் வருவாய் ஈட்டாவிட்டால், பின் ஏழைகளுக்கு எப்படி செலவிடுவது?
அரசாங்கம் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கிறதா அல்லது தொழிற்துறைக்கு ஆதரவாக இருக்கிறதா என்று நாட்டில் எப்போதுமே ஒரு வெற்று விவாதம் நடந்து கொண்டிருக்கும்.
நான் இருதரப்புக்குமே சாதகமானவன். இரண்டுக்கும் இடையே முரண்கள் இருப்பதாக நான் கருதவில்லை. இரண்டுமே இணைந்து நடைபோடும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
ஏழைகளை அரசு கருத்தில் கொண்டுள்ளது. சமூக நலத்திட்டங்களுக்காக நாங்கள் நிதியைப் பேண வேண்டும். மேலும் மாநிலங்களுக்கும் நிதியளிக்க வேண்டும். இது, சமநிலையான நடவடிக்கை. உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதேசமயம், நிதிப் பற்றாக்குறையிலும் கவனம் செலுத்த வேண்டும். கார்ப்பரேட் வெளிநாட்டு முதலீடுகளை மட்டுமல்ல உள்நாட்டு முதலீடுகளையும் ஈர்க்கவே, கார்ப்பரேட் வரி நான்கு ஆண்டுகளில் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.
வரி விகிதம் குறைக்கப்படும் அதேசமயம் சலுகைகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும். இந்தியாவின் வரி விகிதங்கள் உலக அளவில் போட்டியிடத்தக்க வகையில் மாற்றியமைக்க விரும்புகிறோம்.