

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி, தயாளு உள்ளிட்ட 19 பேரின் பதில்கள் நாளை (திங்கள்கிழமை) முதல் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்கிறது.
2ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி, கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் மேம்பாட்டாளர்கள் சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த நவம்பர் 17-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் 25 சாட்சிகளின் வாக்குமூலங்கள் சுமார் 600 பக்கங்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 பேரும் மொத்தம் 400 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு 225 பக்கங்கள் கொண்ட கேள்வித் தாளை நீதிபதி ஓ.பி. சைனி கடந்த 4-ம் தேதி அளித்தார்.
இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள 19 பேரின் பதில்களையும் பதிவு செய்யும் பணி தொடங்கும் என்று தெரிகிறது.