

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:
பயோ-டீசல் விற்பனை
மரபு சாரா எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயல்:
பயோ டீசல் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், உரிமம் பெற்றவர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் அனைத்து நுகர்வோர்களுக்கும் பயோ-டீசலை விற்பனை செய்வதை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உணவு தானியம் அல்லாத ஆமணக்கு, புங்கன் போன்ற பல்வேறு எண்ணெய் வித்துகளிலிருந்து பயோ-டீசலை உற்பத்தி செய்வது தொடர்பான ஆய்வுக்கு ஆதரவை அரசு தொடர்ந்து அளிக்கிறது.
டெல்லியில் காற்று மாசுபாடு
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தரவுகளின் படி, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவை விட டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. டெல்லியில் உள்ள 5 பள்ளிகளில் நடந்த காற்று தர ஆய்வுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட காற்று அதிகமாக மாசடைந்துள்ளது தெரியவந்துள்ளது. காற்றில் மாசுபாட்டை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு முன்வந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
பெண்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி:
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு மட்டும் 3, 09, 546 குற்றச்சாட்டுகள் இவ்வகையில் பதிவாகியுள்ளன. இது கடந்த 2011-ம் ஆண்டு 2,28,650 ஆகவும், 2012-ம் ஆண்டு 2,44,270 ஆகவும் இருந்தது.
கங்கையைக் கொண்டு வந்தது யார்?
கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. பிரபத்சிங் சவுகான், “கங்கையை யார் கொண்டு வந்தது? அதில் குளிப்பதால் என்ன பயன்? என்று கேள்வியெழுப்பினார்.
அப்போது அவையின் மற்ற உறுப்பினர்கள் புன்முறுவல் பூத்தனர். ஒரு சிலர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும், “ என்ன இது, இதுதான் கேள்வியா?” எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வர் லல் ஜாட், “புராணக் கதைப்படி ராஜா பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்தார். அங்கு வழிபாடுகள் நடக்கின்றன” என்றார்.