

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க மாவட்ட நீதிபதி தலைமையில் தலைமை நம்பி, 2 உறுப்பினர்கள் மற்றும் கேரள அரசு பிரதிநிதி என 5 நபர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்தக் குழுவில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் நியமிக்கப்படவில்லை. இதனால் கோயில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து அரச குடும்பத்தினர் விலக்கப்பட்டுள்ள னர்.
1947-ல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு அரச குடும்பத்தின் நிர்வாகத்தில் இருந்த பெரும்பாலான கோயில்கள் தேவஸ்தான போர்டுக்கு மாற்றப்பட்டன. ஆனால் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் மட்டும் தொடர்ந்து அரச குடும்பத்தினர் வசம் இருந்து வந்தது.
கோயிலின் கருவூலங்களைத் திறந்து புகைப்படம் எடுத்து ஆல்பம் தயாரிப்பதை எதிர்த்து 2007-ம் ஆண்டில் 2 பக்தர்கள் கீழ்நிலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து கருவூலங்களை திறக்கும் அதிகாரத்தை 2 நபர் அடங்கிய வழக்கறிஞர் கமிஷனிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது.
மேலும் குருவாயூர் கோயிலைப் பின்பற்றி புதிய நிர்வாக முறையை கடைப்பிடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோயில் நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.பி. சுனராஜன் உயர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், கோயில் சொத்துகள் தனியாருக்கு சொந்தமாக இருக்கக்கூடாது, கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் கோயிலை நிர்வகிக்க அறக்கட்டளை தொடங்க ஆலோசனை கூறியது. இதை எதிர்த்து அரச குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் 2011-ம் ஆண்டில் கோயிலின் பாதாள அறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான தங்க, வைர நகைகள் இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பத்மநாப சுவாமி கோயில் நிலவரம் குறித்து நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதன்பேரில் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து மாவட்ட நீதிபதி தலைமையில் 5 நபர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. மேலும் கோயில் கருவூலங்களில் உள்ள தங்கம், வைர ஆபரணங்கள், உண்டியல் வருமானத்தை கணக்கிட்டு பராமரிக்கும் பணி முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால உத்தரவு பத்மநாப சுவாமி கோயில் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.