மனுவில் குற்றப் பின்னணியை மறைத்தால் வேட்பாளரின் தேர்தல் வெற்றி செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மனுவில் குற்றப் பின்னணியை மறைத்தால் வேட்பாளரின் தேர்தல் வெற்றி செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர் தனது குற்றப் பின்னணி விவரங்களை மறைத்தால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் தாலுகா தேக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவராக 2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிருஷ்ண மூர்த்தி. வேட்புமனு தாக்கலின் போது அவர் தன் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் விவரத்தை தெரியப்படுத்தாமல் மறைத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதை சுட்டிக்காட்டி அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வேட்பு மனுவையே தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

குற்றங்கள் குறித்த விவரத்தை வேட்பாளர் தெரிவிக்க வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். குற்ற விவரத்தை தெரிவிக்காமல் போகும்போது வாக்காளர்கள் சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமைக்கு குந்தகம் ஏற்படுகிறது.

குற்றச்செயல் விவரத்தை தெரிவிக்காவிட்டால் அவரது தேர்தல் வெற்றியை செல்லாததாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 100 (1)பி-இன் கீழ் தேர்தல் நடுவர் மன்றம் அறிவிக்கலாம். உண்மைகளை மறைக்கும்போது நன்கு அலசி ஆராய்ந்து வேட்பாளரை தேர்வுசெய்வதற்கான சூழ்நிலை இல்லாமல் போகிறது. வேட்பாளரை பற்றி முழுமையாக அறிந்துகொள்வது வாக்காளரின் அடிப்படை உரிமை. அதுதான் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு முக்கியம். அரசியலில் கிரிமினல்கள் இடம்பெறுவது ஏற்கத்தக்கதல்ல பொதுவாழ்வில் ஊழல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in