

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக, `நிதி ஆயோக்' அமைப்புடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இது `நிதி ஆயோக்' அமைப்பின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வல்லுநர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலீடு களை ஈர்ப்பது, வேலைவாய்ப்பு களை உருவாக்குவது போன்றவை குறித்து ஆலோசனைகள் நடத்தப் பட்டன.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும் போது, "நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர்களுடன் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் பட்ஜெட் குறித்த விஷயங்களும் விவாதிக்கப் பட்டன. குறிப்பாக உள்நாட்டு சேமிப்பை உயர்த்துவது மற்றும் விவசாயத்தின் நிலை குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டோம்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை எவ்வளவு திறமையாகச் செயல்படுத்த முடியும் என்பது குறித்தும், வறுமை நிலையை எப்படிக் குறைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிர மணியன், `நிதி ஆயோக்' அமைப் பின் உறுப்பினர்கள் விவேக் தேவ்ராய், வி.கே.சரஸ்வத், மத்திய நிதி இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, திட்ட அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் விமல் ஜலான் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.