

கோப்புப்படம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட் டம் காணப்படுகிறது. சுவாமியை தர்ம தரிசனம் வாயிலாக தரிசிக்க 34 கம்பார்ட்மென்டுகளும் நிரம்பி, கோயிலுக்கு வெளியே நாராயணகிரியை தாண்டி, சிலா தோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இதனால் தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்திலும், அன்னதான மையத்திலும், தரிசன வரிசையிலும், லட்டு பிரசாதம் வாங்குவதற்கும், காலண்டர்கள், டைரிகள் வாங்கவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, காபி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. மொபைல் குடிநீர் வாகனம் மூலம் பக்தர்களுக்கு உடனுக்குடன் குடிநீர் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நாளை 29-ம் தேதி வரை திருமலை மற்றும் திருப்பதி விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் வழங்குவதை தேவஸ்தானம் நிறுத்தியதால், பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பினர்.
வைகுண்ட ஏகாதசிக்கு, டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1-ம் தேதி டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் மட்டும் அதில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்துக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.