

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடகாவில் அமைச்சர் பதவி கேட்டு 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பேசிவருவதால் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், லட்சுமண் சவதி, சுப்பா ரெட்டி, சிவண்ணா, வினய் குல்கர்னி உள்ளிட்ட 30 பேர் நேற்று முன்தினம் டெல்லிக்கு ஒரே விமானத்தில் சென்றனர்.
அங்கு அவர்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தரப்பில் கூறுகையில், ‘‘காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எங்களுக்கு பதவி கிடைக்காததால் தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு எதையும் செய்ய முடியவில்லை. எனவே அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில், சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்” என்றனர்.
காங்கிரஸ் மேலிட வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும். அமைச்சர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். அதற்கான சூழலைப் பொறுத்து பதவிகள் வழங்கப்படும்'' என்றனர்.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் போர்க்கொடியால் முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.