

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் (டிஎம்சி) இருந்து நீக்கப்பட்டவர் எம்எல்ஏ, ஹுமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தின் பெல்தங்காவில் கடந்த 6-ம் தேதி பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சூழலில் ஹுமாயூன் கபீர் கூறுகையில், “அடிக்கல் நாட்டு விழாவுக்கு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக 4 லட்சம் பேர் வந்திருந்தனர். பெல்தங்காவில் ரூ.300 கோடி செலவில் மசூதி கட்டுகிறோம். இதுதவிர மால்டா மற்றும் பிர்பும் மாவட்டங்களில் ரூ.700 கோடி செலவில் மேலும் 2 பாபர் மசூதிகள் கட்ட உள்ளோம்" என்றார்.
மே.வங்கத்தில் முஸ்லிம்கள் சுமார் 29% உள்ளனர். இவர்கள், முர்ஷிதாபாத்தில் 70%, மால்டாவில் 51%, பிர்புமில் 35% உள்ளனர். பெல்தங்கா மசூதிக்காக ஒரு முஸ்லிம் ரூ.80 கோடி அளித்துள்ளார். அடிக்கல் நாட்டு விழாவில் அரபு நாடுகளின் சில மவுலானாக்களும் கலந்து கொண்டனர். எனவே, ஹுமாயூன் கட்ட உள்ள மசூதிகளுக்கு அரபு நாடுகளில் இருந்தும் பல கோடி நிதி வரும் வாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், "முதல்வர் மம்தாவின் மறைமுக சம்மதத்தில் அனைத்தும் நடைபெறுகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. புதிய அரசு, பாபர் பெயரில் கட்டப்படும் மசூதிகளின் செங்கற்களை பிடுங்கி எறியும்" என்றார்.
உ.பி. காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறுகையில், ‘மசூதி கட்டுவதென்றால் கட்டுங்கள். அதை வைத்து நாடகம் நடத்தாதீர்கள்” என்றார்.
அயோத்தி துறவிகளும் பாபர் மசூதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்குள்ள தபஸ்வீ மடத்தின் தலைவர் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா தலைமையில் ஹுமாயூன் கபீரின் படங்களை எரித்து தங்கள் கோபத்தை காட்டினர். பாபரின் பெயரில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க முடியாது என்று பரம்ஹன்ஸ் எச்சரித்தார்.
இதனிடையே தெலங்கானாவின் கிரேட்டர் ஹைதராபாத்தில் பாபர் மசூதி கட்டப்பட உள்ளதாக அம்மாநிலத்தின் தெஹரீக் முஸ்லிம் ஷாபான் அமைப்பு அறிவித்துள்ளது.