

ஜமுய்: பிஹார் மாநிலத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிஹார் மாநிலம் ஜமுய் பகுதியில் சனிக்கிழமை மாலை பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு இருசக்ககர வாகனத்தில் பதின்பருவ மாணவர் மற்றும் மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், அவர்களைத் தாக்கியதுடன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை, இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொலியில், மாணவன் இருசக்கர வாகனத்தை ஓட்ட, மாணவி பின்னால் அமர்ந்து செல்கிறார். அப்போது அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் ஒரு கும்பல், அவர்களிடம் தகாத முறையில் கேள்வி எழுப்பித் தாக்குகிறது. அவர்கள் இருவரும் தாங்கள் ஒரே பள்ளியில் படிப்ப தாகவும், வீட்டில் சொல்லிவிட்டுத்தான் வந்திருப்பதாகவும் கூறி, கைகூப்பித் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார்கள்.
ஆனாலும், அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்து முகத்தில் அறைகிறான். மற்றொரு வீடியோவில், தப்பியோட முயன்ற மாணவியைப் பலவந்தமாகப் பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து தூக்கிக் கொண்டு ஓட முயலும் கொடூரக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து ஜமுய் எஸ்பி விஸ்வஜீத் தயாள் கூறும்போது, “இந்த சம்பவம் செப்டம்பர் 19 மாலை 6 முதல் 7 மணியளவில் நடந்துள்ளது. இதில், தொடர்புடைய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். காணொலி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள மற்ற நபர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் குறைந்தது 6 முதல் 7 இளைஞர்களுக்குத் தொடர்பிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
ராகுல் கண்டனம்
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “பிஹாரில் மாலை 7 மணிக்கு ஒரு பெண் பொதுச் சாலையில் பாதுகாப்பாக நடமாட முடியாவிட்டால் அதற்கு அம்மாநில அரசுதான் பதிலளிக்க வேண்டும். பெண் மீது அதிகாரம் செலுத்த இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? இது கலாச்சாரம் அல்ல, ஆண்களின் ஆதிக்க மனப்பான்மை.
இத்தகைய போக்குகளை நியாயப்படுத்தும்போதுதான் சிலர் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை செயலில் தயக்கமின்றி ஈடுபடுகின்றனர். இது கண்டனத்துக்குரியது” என்றார்.