‘ஜெம்’ வீரமணி வழக்கில் நீளும் தொடர்புகள் முதல் வீடியோ ஆதாரங்கள் வரை - திடுக்​கிடும் பின்னணி தகவல்​கள்

‘யாரும் தப்பிவிடக் கூடாது’ - முதல்வர் விஜய் உத்தரவால் விலகும் மர்மங்கள்
‘ஜெம்’ வீரமணி வழக்கில் நீளும் தொடர்புகள் முதல் வீடியோ ஆதாரங்கள் வரை - திடுக்​கிடும் பின்னணி தகவல்​கள்
Updated on
4 min read

சென்னை: தமிழகத்​தில் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்ள ‘ஜெம் கிரானைட்​ஸ்’ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஆர்​.வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவ​காரத்​தில், திடுக்​கிடும் பின்​னணி தகவல்​கள் ஒவ்​வொன்​றாக வெளிவந்து கொண்​டிருக்​கின்​றன. பண பலமும், அதி​கார பலமும் குற்​ற​வாளி​களை எப்​படி காப்​பாற்ற முயன்றன என்​ப​தை​யும், தற்​போது இந்த வழக்​கில் காவல்​துறை​யின் உயர​தி​காரி​கள் மற்​றும் இடைத்​தரகர்​கள் தொடர்பு குறித்​தும் அதிர்ச்​சித் தகவல்​கள் ஒவ்​வொன்​றாக வெளிவந்து கொண்​டிருக்​கின்​றன.

வீடியோ ஆதா​ர​ம்: குழந்தை உரிமை ஆர்​வலர் ஒரு​வர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தின் கீழ் உள்ள பாலியல் தடுப்​புப் பிரி​வில் பென் டிரைவ் ஒன்றை கடந்த 2025-ம் ஆண்டு அக்​டோபர் 6-ம் தேதி ஒப்​படைத்​தார். அதில் இடம்​பெற்​றிருந்த 2019-ம் ஆண்​டின் சிசிடிவி காட்​சிகள் காவல்​துறையையே உலுக்​கின.

13 வயது சிறுமி ஒரு​வரை, முதி​ய​வர் ஒரு​வர் பாலியல் வன்​கொடுமை செய்​யும் கொடூர காட்சி பதி​வாகி​யிருந்​தது. அவர் பிரபல கிரானைட் தொழில​திபரும், ஜெம் குழு​மத் தலை​வரு​மான ஆர்​.வீரமணி என்​பதும் தெரிய​வந்​தது. இதையடுத்து சென்னை மத்​திய குற்​றப் பிரிவு பாலியல் குற்றத் தடுப்பு பிரிவு போலீ​ஸார் மறு​நாளே வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இந்​தக் கொடூரச் செயலுக்​கு, சென்னை தேனாம்​பேட்​டையைச் சேர்ந்த சாந்தி மற்​றும் அவரது கணவரும் ஜெம் சாஃப்ட்​வேர் சொல்​யூஷன்ஸ் நிறு​வனத்​தின் மேலாண் இயக்​குநரு​மான மகேந்​திர சிம்​கன் ஆகியோரின் வீடு​கள் மற்​றும் பங்​களாக்​கள் பயன்​படுத்​தப்​பட்​டதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட மகேந்திர சிம்கன்</p></div>

கைது செய்யப்பட்ட மகேந்திர சிம்கன்

நீதி​மன்​றத்​தின் அதிரடி​: பென் டிரைவ் போன்ற வலு​வான ஆதா​ரங்​கள் இருந்​த​போ​தி​லும், குற்​ற​வாளி தொழில​திபர் மற்​றும் அரசி​யல் செல்​வாக்கு மிக்​கவர் என்​ப​தால் தொடக்கத்​தில் காவல்​துறை​யினர் உடனடி​யாக நடவடிக்கை எடுக்​க​வில்​லை. பாதிக்​கப்​பட்ட சிறுமியை அடை​யாளம் காண முடிய​வில்லை என்​றும், புகாரில் வலு​வான ஆதா​ரம் இல்லை என்​றும் கூறி 2026 பிப்​ர​வரி மாதத்​தில் இந்த வழக்​கினை முடித்​து​வைக்​கு​மாறு சிறப்பு போக்சோ நீதி​மன்​றத்​தில் காவல்​துறை இறுதி அறிக்கை தாக்​கல் செய்​தது.

ஆனால், குற்​ற​வாளி​களைக் காப்​பாற்ற முயன்ற காவல்​துறை​யின் முயற்​சியை போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி கடுமை​யாக எதிர்த்​தார். “வீடியோ ஆதா​ரம் இருந்​தும் குற்​றப் பின்​னணியை எப்​படி கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை?” என்று கேள்வி​களை எழுப்​பிய நீதி​மன்​றம், வழக்​கினை மீண்​டும் விசா​ரிக்க உத்​தர​விட்​டது. நீதித்​துறை​யின் இந்த அதிரடித் தலை​யீடு வழக்​கின் போக்​கையே முழு​மை​யாக மாற்​றியது.

அறக்​கட்​டளை பெயரில் கொடூரம்: விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​ட​போது, வீரமணி​யின் கொடூரச் செயல்​கள் குறித்து பல உண்​மை​கள் வெளிவந்​தன. அதாவது, போயஸ் கார்​டன் அருகே ரூ.2 லட்​சம் வாடகைக்கு எடுக்​கப்​பட்ட சொகுசு பங்​களா​வில் பாலியல் வன்​கொடுமை​கள் அரங்​கேற்​றப்​பட்​டுள்​ளன.

அங்கு மட்​டும் அல்​லாமல் சிறுமிகளை தனக்கு சொந்​த​மான வீடு, அலு​வல​கம், சொகுசு பங்​களாவுக்​கும் வீரமணி வரவழைத்து பாலியல் வன்​கொடுமை செய்​தா​ராம்.

ஆதர​வற்ற குழந்​தைகள் மற்​றும் ஏழ்​மை​யான பள்​ளி, கல்​லூரி மாணவ-​மாணவி​களுக்கு உதவுவது போல் ஒரு அறக்​கட்​டளையை வீரமணி நடத்​தி​யுள்​ளார். ஏழ்​மை​யைச் சாதக​மாகப் பயன்​படுத்​தி, கல்வி உதவி வழங்​கு​வ​தாகக் கூறி சிறுமிகளை அந்​தப் பங்​களா​வுக்கு வரவழைத்​துள்​ளனர்.

சாந்தி மற்​றும் மகேந்​திர சிம்​ஹன் தம்​ப​தி​யினர் அந்​தச் சிறுமிகளுக்கு மது​பானம் கொடுத்​து, மிரட்டி வீரமணிக்​கும் அவரது தொழில​திபர் நண்​பர்​களுக்​கும், அரசி​யல்​வா​தி​களுக்​கும் விருந்​தாக்​கி​யுள்​ளனர். பணம் மற்​றும் ஆடம்பர பரிசு பொருட்​களை அள்​ளிக் கொடுத்​தும் அந்​தச் சிறுமிகளை தங்​களது இச்​சைக்கு இணங்க வைத்​துள்​ளனர்.

ரூ.50 கோடி லஞ்​சம்? - இந்த விவ​காரம் கசிய தொடங்கிய உடன், காவல்​துறையைச் சேர்ந்த சில உயர​தி​காரி​கள் வீரமணியை மிரட்டி ரூ.50 கோடிக்கு மேல் லஞ்​ச​மாகப் பெற்​றுள்​ள​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இந்​தப் பணத்தை கொடுக்க வீரமணி சென்னை கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் உள்ள சொத்து உள்பட சில சொத்​துகளை குறைந்த விலைக்கு விற்று பணத்தை திரட்டி லஞ்​ச​மாகக் கொடுத்​துள்​ளார்.

இதில் சில இடைத்​தரகர்​கள் கைகோத்​துச் செயல்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கும் அதில் ஒரு பகு​தி​யாக கோடிக்​கணக்​கில் கமிஷ​னாக பணம் கைமாறி​யுள்​ளது. இதனால், அந்த இடைத்​தரகர்​களும் காவல் துறை​யின் தீவிர கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்​டு​ வரப்​பட்​டுள்​ளனர்.

சம்​பவம் நடை​பெற்​ற​தாக கூறப்​படும் காலத்​தில் சென்னை காவல் துறை​யில் பணி​யாற்​றிய போலீஸ் அதி​காரி​கள் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான வீரமணி​யைத் தப்ப வைக்க எந்த வகை​யில் எல்​லாம் முயன்​றனர். அதில் அவர்​களின் பங்கு என்ன? அதனால், அடைந்த பயன்​கள் என்ன? என்​பது பற்​றிய தகவல்​கள் சேகரிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் சம்​பந்​தப்​பட்ட உயர் அதி​காரி​கள் மற்​றும் அவர்​கள் உத்​தர​வுக்​கிணங்க செயல்​பட்ட போலீஸ் அதி​காரி​களுக்கு பாலியல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் விரை​வில் சம்​மன் அனுப்​பி, வரவழைத்து விசா​ரணை நடத்த திட்​ட​மிட்டுள்​ளனர். அவர்​கள் மீது பாரபட்​சம் இன்றி நடவடிக்கை எடுக்​கப்​பட​வுள்​ளது.

முதல்வர் ஆலோசனை: இந்த விவ​காரத்​தில் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் மற்​றும் உளவுத்​துறை அதி​காரி​கள் ஆகியோரை அழைத்து முதல்​வர் விஜய் ஆலோ​சித்​துள்​ளார். குற்​ற​வாளி​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது பாரபட்​சம் இன்றி நடவடிக்கை எடுக்​கும்​படி போலீஸ் அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதனால், விசா​ரணை மேலும் வேகம் எடுத்​துள்​ளது. இதற்​கிடை​யில், இந்த வழக்​கில் சட்ட விரோத பணப்​பரி​மாற்​றம் நடை​பெற்​றுள்ள முகாந்​திரம் உள்​ள​தால் அமலாக்​கத்​துறை​யும் இந்த வழக்​கில் விரை​வில் களம் இறங்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

<div class="paragraphs"><p>பாலியல் கொடூரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றான தேனாம்பேட்டை வீடு.</p></div>

பாலியல் கொடூரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றான தேனாம்பேட்டை வீடு.

விரைவில் குற்றப்பத்திரிகை: வீரமணிக்கு எதி​ரான வழக்​கில் சிறை​யில் உள்ள சாந்​தி​யே, வீரமணிக்கு எதி​ராக புகார்​களை​யும் ஆதா​ரங்​களை​யும் அளித்து வரு​கிறார். இதன் அடிப்​படை​யில், போலீ​ஸார் விரை​வில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​ய​வுள்​ளனர்​.

மேலும் 9 பேர் வாக்​குமூலம்: விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக எழும்​பூர் நீதி​மன்ற அனு​ம​தி​யுடன் புழல் சிறை​யிலேயே வீரமணி​யிடம் 3 நாட்​கள் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அவர் தனது செயல்​கள் தொடர்​பாக​வும், தன்னை எப்​படி எல்​லாம் குறிப்​பிட்ட சிலர் மிரட்டி பணம் பறித்​தார்​கள் என்​பது பற்​றியெல்​லாம் போலீ​ஸாரிடம் விரி​வான வாக்​குமூலம் அளித்​துள்​ளார்.

மேலும், தனது உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தாக​வும் போலீ​ஸாரிடம் அச்​சம் தெரி​வித்​துள்​ளார். அவர் அளித்த வாக்​குமூலத்தை வீடியோ​வாக​வும், எழுத்​துப்பூர்​வ​மாக​வும் பெற்​றுக் கொண்ட போலீ​ஸார், அதை அடிப்​படை​யாக வைத்து சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​தவர்​கள், அவர்​களை மிரட்டி பணம் பறித்த போலீஸ் அதி​காரி​கள், அவர்​களுக்கு நெருக்​க​மானவர்​கள், உடந்​தை​யாக இருந்​தவர்​கள் என தனித்​தனி பெயர் பட்​டியலை தயார் செய்​துள்​ளனர்.

இதில், ஒவ்​வொரு​வருக்​கும் உள்ள தொடர்​பு, அவர்​களின் சொத்து பட்​டியல், அதி​காரத்தை எவ்​வாறெல்​லாம் தவறாக பயன்​படுத்​தி​னார்​கள் என்​பது குறித்​தும் விரி​வான விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

மேலும், வீரமணி வீடு மற்​றும் அலு​வல​கங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​களில் 10-க்​கும் மேற்​பட்ட சிறுமிகள் வன்​கொடுமைக்​குள்​ளான வீடியோக்​கள் மற்​றும் புகைப்​படங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. தற்​போது மேலும் 9 பேர் தாங்​கள் சிறுமிகளாக இருந்​த ​போது வீரமணி​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக புகார் அளித்​துள்​ளனர். இவர்​கள் ரகசிய வாக்​குமூல​மும் அளித்​துள்​ளனர். வீடியோ​வில் இடம்​பெற்​றிருந்த சிறுமி பட்​டியலினத்தை சேர்ந்​தவர் என்​ப​தால், இந்த வழக்​கில் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டப் பிரிவு​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

ரகசிய அறைகள், மது விருந்து: வீரமணி தனது அலு​வல​கம், வீடு மற்​றும் அடிக்​கடி செல்​லும் இடங்​களில் தனிச்​சொகுசு அறை​களை ரகசி​ய​மாக அமைத்​துள்​ளார். இங்கு அடிக்​கடி சிறுமிகளும், பெண்​களும் வந்து சென்​றுள்​ளனர். மேலும், அவரது நண்​பர்​கள், தொழில​திபர்​கள், பங்​கு​தா​ரர்​கள், போட்​டி​யாளர்​கள் இங்கு வந்து சென்​றுள்​ளனர். அவர்​களுக்கு அடிக்​கடி மது விருந்து அளித்​துள்​ளார். அப்​போது, அவர்​களது ஆசைக்​கிணங்க சிறுமிகள் மற்​றும் பெண்​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் பட்​டியலை போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர்​.

20 ஆண்டுகளாக நடந்த கொடுமை: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வதை வீரமணி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சாந்தியே, தற்போது வீரமணிக்கு எதிராக திரும்பி பல தகவல்களையும், புகார்களையும் அளித்து வருகிறார். அவர் வீரமணிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றில் கடந்த 2003-ம் ஆண்டு ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் நினைவிருக்கிறதா? என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீஸார் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

இன்​னொரு ‘ஜெஃப்ரி எப்​ஸ்​டீன்’ - அமெரிக்​கா​வில் ஜெஃப்ரி எப்​ஸ்​டீன் என்ற தொழில​திபர், உலக அளவி​லான அரசி​யல்​வா​தி​கள், தொழில​திபர்​கள் உள்​ளிட்ட முக்​கியப் பிர​முகர்​களுக்கு பாலியல் விருந்​தளிக்க ஒரு தனித் தீவையே விலைக்கு வாங்கி அங்கு சிறுமிகள் மற்​றும் பெண்​களை தனி விமானத்​தில் அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடு​பட்​டார்.

இந்த எப்​ஸ்​டீனின் வழக்​குத் தொடர்​பாக, புகைப்​படங்​கள், வீடியோ காட்​சிகள், மின்​னஞ்​சல் உட்பட பல லட்​சக்​கணக்​கான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்டு பொது​வெளி​யில் விடப்​பட்​டன. குறிப்​பாக, முன்​னாள் அதிபர் பில் கிளின்​டன், அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்​கிலாந்து இளவரசர் ஆண்ட்​ரு, தொழில​திபர்​கள் பில்​கேட்​ஸ், எலான் மஸ்க், ரிச்​சர்டு பிரான்​சன், அனில் அம்​பானி உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களைச் சேர்ந்த முக்​கிய பிரபலங்​களின் பெயர்​கள், புகைப்​படங்​கள் இந்த ஆவணங்​களில் இடம்​பெற்​றுள்​ளன.

இந்​நிலை​யில் நியூ​யார்க் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த எப்​ஸ்​டீன் ஜூலை 2019-ல் தற்​கொலை செய்​து​கொண்​ட​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதேநிலை வீரமணிக்​கும் ஏற்​பட்டு விடக்​கூ​டாது என சமூக ஆர்​வலர்​கள் அஞ்​சுகின்​றனர். அவர் மூலம் பல்​வேறு அதி​கார மட்​டத்​தில் உள்​ளவர்​கள் சிக்க வாய்ப்பு உள்​ளது. எனவே, வீரமணிக்கு சிறை​யில் உரிய உயர்​பாது​காப்பு வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்​துள்​ளது.

குழந்​தைகள் மீது கவனம் தேவை:

சிறுமிகளுக்கு நடை​பெறும் பாலியல் கொடூரங்​கள் குறித்து கீழ்ப்​பாக்​கம் அரசு மனநல மருத்​து​வ​மனை பேராசிரியர் மருத்​து​வர் பூர்ண சந்​திரிகா கூறிய​தாவது: குழந்​தைகளுக்கு நடக்​கும் பாலியல் வன்​கொடுமை தடுக்​கப்பட வேண்​டும். குழந்​தைகளுக்கு “குட் டச் - பேட் டச்” மட்​டும் சொல்லி கொடுக்​கின்​றனர்.

குழந்​தைகளுக்கு அது மட்​டும் போதாது. தனக்கு நடப்​பது தவறானது என்​பதை குழந்​தைகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்​டும். அதனை பெற்​றோரிடம் சொல்ல வேண்​டும் என்ற சிந்​தனை குழந்​தைகளுக்கு வரவேண்​டும். குழந்​தைகளின் அன்​றாட நடவடிக்​கை​களில் பெற்​றோர் கவனம் செலுத்த வேண்​டும்.

படிப்​பில் கவனம் குறைந்​தல், சரி​யாக தூங்​காமல் இருப்​பது, காரணம் எது​வும் இல்​லாமல் அழு​வது, தனி​யாக இருப்​பது போன்ற மாற்​றங்​கள் இருந்​தால், குழந்​தைகளிடம் அன்​போடும், பாசத்​தோடும் பேச வேண்​டும். தங்​களுக்கு எது நடந்​தா​லும் தைரிய​மாக சொல்​வதற்கு பெற்​றோர் மீது குழந்​தைகளுக்கு நம்​பிக்கை வரவேண்​டும். அந்த நம்​பிக்கை குழந்​தைகளிடம் வரும்​படி பெற்​றோர் நடந்து கொள்ள வேண்​டும்.

குழந்​தைகளிடம் மாறு​தல் இருப்​பதை ஆசிரியர்​கள் கண்​டு​பிடித்​து​விடு​வார்​கள். ஆசிரியர்​களும் குழந்​தைகளிடம் கேட்​கலாம். பெற்​றோரிட​மும் தகவலை தெரிவிக்​கலாம். யாரென்று தெரி​யாதவர்​களை​விட நன்கு தெரிந்​தவர்​கள் தான் குழந்​தைகளிடம் தவறாக நடந்​து​கொள்​கின்​றனர். அதனால், பெற்​றோர் மிகுந்த கவனத்​துடன் இருக்க வேண்​டும்.

‘ஜெம்’ வீரமணி வழக்கில் நீளும் தொடர்புகள் முதல் வீடியோ ஆதாரங்கள் வரை - திடுக்​கிடும் பின்னணி தகவல்​கள்
‘ஜெம்’ கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில் நடந்தது என்ன? - திமுக விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in