

லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை விலைக்கு வாங்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இந்த வீடு 2,050 சதுர அடி கொண்ட மூன்றடுக்கு மாளிகை ஆகும். இதனுடைய மதிப்பு ரூ.35 கோடியாகும்.
சுவிட்சர்லாந்து டாவோஸில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அம்மாநில கல்வி அமைச்சர் வினோத் தவ்டே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 முதல் இந்த வீடு பொதுமக்களின் பார்வைக் காகத் திறந்திருக்கும். லண்டனில் தங்கியிருக்கும்போது அவர் எந்தெந்த நூலகங்களுக்குச் சென்றார் என்பதைச் சுற்றிக்காட்ட பணியாளர் ஒருவர் அங்கே இருப்பார்" என்றார்.
இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவுகான் கூறும்போது, "என்னுடைய ஆட்சிக் காலத்தின் இறுதியில் இந்த வீட்டை வாங்கச் சொல்லி மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினேன். இது சர்வதேச கொடுக்கல் வாங்கல் விஷயம் என்பதால் அதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை" என்றார்.