மூன்று ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படுத்த இந்தியா, அமெரிக்கா முடிவு

மூன்று ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படுத்த இந்தியா, அமெரிக்கா முடிவு
Updated on
1 min read

விசாகப்பட்டினம், அலகாபாத், ஆஜ்மீர் ஆகிய நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மேம்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் இடையே டெல்லியில் நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த 3 நகரங்களையும் ஸ்மார்ட் நகரங்களாக மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்கு தனித்தனியே பணிக்குழுவை அமைப்பதென இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு பணிக்குழுவிலும் தலா 3 பேர் இருப்பார்கள். மத்திய அரசு, தொடர்புடைய மாநில அரசு சார்பில் 2 பேரும் அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு முகமையிலிருந்து ஒரு வரும் இடம்பெறுவார்கள்.

ஒவ்வொரு பணிக்குழுவும் செயல்திட்டத்தை பரிந்துரைப்பதற்கு முன்பாக, தங்கள் நகரின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள், திட்ட தேவைகள், முதலீட்டுக்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கும். ஒபாமாவின் உத்தரவின்பேரில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது என பிரிட்ஸ்கர் கூறினார்.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும் போது, “இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கை மற்றும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான எதிர்பார்ப்பு உருவானது. இந்த எதிர்பார்ப்புகளை ஒபாமாவின் தற்போதைய பயணம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் நகரங்கள் காலத்தின் தேவை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in