8 ஆண்டுகளில் 274 தப்பியோடிய குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தகவல்

8 ஆண்டுகளில் 274 தப்பியோடிய குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து தப்பியோடிய 274 பேர் 36 நாடுகளில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2026 வரை 274 தப்பியோடிய குற்றவாளிகள் 36 நாடுகளில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடியவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த, உளவுத்துறை அடிப்படையிலான, தொழில்நுட்பம் சார்ந்த செயல்திட்டத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இது அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வழி வகுத்து, அவர்கள் இந்தியா திரும்புவதை எளிதாக்குகிறது.

தப்பியோடியவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கு முந்தைய அரசாங்கங்களுக்கு அரசியல் விருப்பம் இல்லை. ஆனால், மோடி அரசு தப்பியோடியவர்களை நாடு கடத்துவதை தேசிய முன்னுரிமையாக மாற்றியுள்ளது.

தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள், மூன்று முக்கிய தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. உலகளாவிய செயல்பாடுகள், வலுவான ஒருங்கிணைப்பு, ஸ்மார்ட் ராஜதந்திரம் ஆகியவையே அந்த மூன்று முக்கிய தூண்கள்.

குற்றவாளிகள் தப்பி ஒடுவது என்பது, நாட்டின் இறையாண்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, சட்டம் ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுடன் உள்ளார்ந்த தொடர்புடையது. இதை கருத்தில் கொண்டே, நாடு கடத்தல் கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ச்சியான சட்ட விதிகளை அறிமுகப்படுத்தியது.

மோடி அரசாங்கத்தின் கீழ், இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 401 தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் பாரத்போல்-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக, ஆயிரத்து 400-க்கும் அதிகமான ஏஜென்சிகள் இன்டர்போலுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தகவல் பகிர்வதற்கான நேரம் 3 முதல் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.

மோடி அரசாங்கம், 2019ல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திருத்தச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டத்தை இயற்றியது. மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியதன் மூலம், 2019 முதல் 2026 வரை தப்பியோடிய குற்றவாளிகளின் ரூ.17,874 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2019 முதல் 2026 வரை நாட்டை விட்டு வெளியேறிய பொருளாதார குற்றவாளிகளிடமிருந்து நிதி உட்பட ரூ.18,762 கோடி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளில் 274 தப்பியோடிய குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தகவல்
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” - குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in