

போதை மருந்து பழக்கம், ஒரு தேசிய துயரம். அதை ஒழிக்க அரசுடன் இணைந்து மக்கள் செயல்பட வேண்டும். இப்பழக்கத்திலிருந்து மீள விரும்புவோருக்கு உதவும் வகையில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி நேற்று அவர் உரையாற்றியதாவது: போதைப் பழக்கம், ஒரு தேசிய துயரமாகும். இளைஞர்களை படுகுழியில் தள்ளும் இந்த பழக்கத்தை ஒழிக்க அரசுடன் இணைந்து மக்கள் செயல்பட வேண்டும்.
இந்த பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள், இருண்ட பாதையில் சென்று இறுதியில் அழிவைத் தேடிக்கொள்கிறார்கள். போதைப் பழக்கத்துக்கு எதிரான சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும். திரைப்படம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அற்ற நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
இலவச தொலைபேசி வசதி
இப்பழக்கத்துக்கு அடிமையாகி சீரழியும் இளைஞர்களின் நிலை குறித்து நீண்ட காலமாகவே கவலையடைந்து வருகிறேன். அதே சமயம், போதைப் பொருள்கள்தான் மோசமானவையே தவிர, அந்த பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் அல்ல. அவர்கள், அப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு நாம் உதவ வேண்டும். இது மனநல, சமூக, மருத்துவப் பிரச்சினையாகும். இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட இளைஞரின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், சமூகமும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
போதைப் பழக்கத்திலிருந்து மீள விரும்புவோருக்கு, அது தொடர்பான உதவிகளையும், ஆலோசனைகளையும் தர இலவச தொலைபேசி வசதியை ஏற்படுத்தித் தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதோடு, இந்த பழக்கத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
தீவிரவாதிகளுக்கு உதவி செய்யாதீர்
போதை மருந்தை வாங்குவதற்காக ஏராளமான பணத்தை செலவிடும் இளைஞர்களே, சற்று சிந்தியுங்கள். நீங்கள் செலவிடும் பணம், தீவிரவாத இயக்கங்களுக்குச் செல்கிறது. அவர்கள் அந்த பணத்தைக் கொண்டு துப்பாக்கி வாங்கி, நமது ராணுவ வீரர்களை கொல்கின்றனர். தாய் நாட்டை நேசிக்கும் நீங்கள், தீவிரவாதிகளுக்கு உதவலாமா?
நற்சிந்தனையும், வாழ்க்கையில் எந்தவிதமான லட்சியமும் இல்லாத இளைஞர்கள்தான் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். அவர்களைக் கண்காணித்து, நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
இளைஞர்கள் நேர்மறையான சிந்தனைகளையும், குறிக்கோளையும் வகுத்துக் கொண்டு அதை நோக்கி முன்னேற வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
அதோடு, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜம்மு – காஷ்மீர் மாநில அணியினர், மும்பை அணியை வென்றதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். சமீபத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய கண் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கும் தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் யோசனையை ஏற்று ஜூன் 21-ஐ உலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் அறிவித்துள்ளது குறித்தும், அதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்ததையும் மோடி நினைவுகூர்ந்தார்.