

நாட்டில் முதல் முறையாக, டெல்லியில் தெருக்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்களை போலீஸார் பயன்படுத்த உள்ளனர். டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க எடுக்கப்படும் புதிய முயற்சி இது.
டெல்லியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் 27 வயது பெண், கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், இத்தகைய குற்றங் களுக்கு சாதகமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், இப்பகுதி களை ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகை விமானங்கள் தற்போது எல்லையில் ஊடுருவல் மற்றும் தீவிரவாத நடவடிக்கை களை கண்காணிக்க பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சக்தி வாய்ந்த விளக்குகளை பொருத்துவதன் மூலம் டெல்லியில் பாலியல் குற்றங் கள் உட்பட பல்வேறு குற்றச் செயல் களை தடுக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் கருது கிறது.
முதற்கட்டமாக இந்த விமானங் களை டெல்லியின் வடபகுதியில் அடுத்த மாதம் முதல் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப் பகுதியில்தான் உபேர் கால் டாக்ஸி டிரைவரால் சமீபத்திய பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது. இந்தப் பகுதியில் தான் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையும் சட்டப்பேரவையும் அமைந்துள்ளன.
தரையில் இருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் இயங்க விருக்கும் இந்த உளவு விமானங் கள் சுமார் நான்கு கி.மீ. சுற்றளவு வரை கண்காணிக்கும் சக்தி வாய்ந்தவை.
தொடர்ந்து பறந்து கொண்டிருக் கும் இந்த விமானங்கள், ஒரே பகுதியில் இரு விமானங்கள் கண்காணிக்காதவாறு கணினிகள் மூலம் இயக்கப்பட உள்ளன.
இதில் பதிவாகும் சட்டவிரோத சம்பவங்களை உடனுக்குடன் போலீஸாருக்கு அளிக்கும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’ விடம் டெல்லி போலீஸ் வட்டாரம் கூறும்போது, “இந்த விமானத்தை மத்திய அரசின் ராணுவ வளர்ச்சி ஆய்வு நிறுவனத்திடம் (டி.ஆர்.டி.ஓ) தினமும் ரூ. 50,000 வாடகையில் எடுத்து சோதனை முறையில் பயன்படுத்தினோம். அதற்கு கிடைத்த பலன் காரணமாக இந்த விமானங்களை சொந்தமாகவே வாங்கி பயன்படுத்த உள்ளோம். ஒரு விமானத்தின் விலை சுமார் 10 லட்சம் வரை ஆகும்” என்றன.
டெல்லியில் கிடைக்கும் பலனை பொறுத்து உளவு விமானங்கள் நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.