

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்பாட் பிக்சிங் குற்றம்சாட்டப்பட்ட குருநாத் மெய்யப்பன் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பிசிசிஐ-யின் செயல்பாடுகளில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் பிசிசிஐ-க்கு இது குறித்து 4 வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளது.
1. சீனிவாசன் விலகியிருக்க வேண்டும். பிசிசிஐ கமிட்டி மெய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. மெய்யப்பனுக்கு எந்த விதமான தண்டனை அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய 2 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
3. ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு மெய்யப்பனுக்கான தண்டனை என்னவென்பதை முடிவெடுக்கலாம்.
4. மெய்யப்பனுக்கு என்ன தண்டனை அளிப்பது என்பதை முத்கல் கமிட்டி முடிவு செய்வது.
என்ற 4 விருப்பத் தெரிவுகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீதிபதிகள் கூறியதாவது: “மெய்யப்பனுக்கு எதிராக நடவடிக்கை அவசியம். தண்டனை அளவு என்னவென்பதை முடிவு செய்ய என்ன செய்ய வேண்டும்? நாங்கள் பிசிசிஐ-யின் செயல்பாடுகளில் குறுக்கிட விரும்பவில்லை. தண்டனை அளவுகளை அறிவிக்கவும்” என்று கூறியுள்ளனர்.
மேலும் முரண்பாடான இரட்டை நலன்கள் இல்லை என்று சீனிவாசன் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. "அனைத்துச் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கூறுகிறோம், முரண்பாடான இரட்டை நலன்கள் இல்லை என்பதை ஏற்பது மிகக் கடினம். நீங்கள் இந்தியா சிமெண்ட்ஸின் நிர்வாக இயக்குநர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், நீங்கள் பிசிசிஐ தலைவராக இருந்த போது உங்கள் அணியின் அதிகாரி ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே முரண்பாடான இரட்டை நலன்கள் இல்லை என்பதை ஏற்பது கடினம்” என்று கூறினர் நீதிபதிகள்.