

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் நிதி நடைமுறைகள் என்ன என்பதையும் அதன் முழு விவரங்களையும் அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டுள்ளது.
ஐபிஎல் அணிகள், உரிமையாளர்கள் தேர்வு, வீரர்கள் ஏலம், அணி உரிமையாளர்கள் முதலீடு செய்த பணத்திற்கான லாபம் எப்படி, ஆகிய விவரங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் விவாதம் டிசம்பர் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நேற்று நடைபெற்ற விசாரணை மற்றும் வாதங்கள் வருமாறு:
பிஹார் கிரிக்கெட் சங்க மனுவுக்கு பதில் கூறிய வழக்கறிஞர் சிபல், "என்னை (சீனிவாசன்) நீக்க வேண்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்ற ஒரே திட்டத்தை தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், பிஹார் கிரிக்கெட் சங்கம் மும்பை உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன், தோனி ஆகியோரது முரண்பாடான இரட்டை நலன் பற்றிய பிரச்சினையை எழுப்பவில்லை, ஆனால் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பியுள்ளனர். என்றும் குறை கூறினார்.
இந்த வாதத்தை ஏற்காத நீதிபதி தாக்கூர், "அதாவது ரிட் மனுவில் ஒரு விஷயம் எழுப்பபட்டதா இல்லையா என்பது இப்போது முக்கியமல்ல, முரண்பாடான இரட்டை நலன் இருக்கிறதா இல்லையா? ஒன்று இருக்கிறது அல்லது இல்லை இந்த இரண்டு பதில்களுக்கும் இடைப்பட்ட பதில் அல்லது 3-வது பதில் கிடையாது. எனவே முத்கல் அறிக்கையின் முன்பு முரண்பாடான இரட்டை நலன் இல்லை என்பதை தரவு பூர்வமாக எங்களுக்குக் காண்பியுங்கள்” என்றார்.
டிசம்பர் 8-ஆம் தேதி மீண்டும் விவாதம் தொடர்கிறது.