ஹரியாணாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ஹரியாணாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Published on

ஹரியாணாவில் சாமியார் ராம்பால் ஆசிரமத்தின் முன்னர் செய்தி சேகரிக்க காத்திருந்த செய்தியாளர்கள் மீது அம்மாநில போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணாவில், சாமியா ராம்பால் கைது செய்யப்படும் முன்னர் அங்கு நடந்த கலவரங்கள் தொடர்பான செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு சிலர் படுகாயமடைந்தனர். கேமரா போன்ற உபகரணங்கள் சேதமடைந்தன.

படுகாயமடைந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், மனுதாரர் சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தாக்குதலில் ஈடுபட்ட போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருப்பதாக கூறினார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட ஹரியாணா மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in