

புதுடெல்லி: மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்புக்காக 2.4 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீஸார்(சிஏபிஎஃப்) அனுப்பப்பட உள்ளனர்.
மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 2.4 லட்சம் சிஏபிஎஃப் போலீஸார் அனுப்பப்பட உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மத்திய ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் வரும் 29-ம் தேதி 2-ம் கட்டத் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே சுமார் 200 கம்பெனி சிஏபிஎஃப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
அதுமட்டுமல்லாமல் சுமார் 500 கம்பெனி சிஏபிஎஃப் கம்பெனி படையினர், மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர்.
அண்மையில் மால்டா மாவட்டத்தில் நீதித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சில கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்புப் பணிகளை ஆயுதப் படை போலீஸார் மேற்கொள்வர். மாநிலம் முழுவதும் சுமார் 2.4 லட்சம் மத்திய ஆயுதப் படை போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் இருப்பர். இதுதவிர மேற்கு வங்க மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர்" என்றார்.