

புதுடெல்லி: உலக குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய பன்முக வறுமைக் குறியீட்டின்படி, 2013–14 முதல் 2022–23 வரையிலான காலத்தில் குழந்தைகள் உட்பட 24.8 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீள இந்தியா உதவி செய்துள்ளது. இதனால் நாட்டின் பன்முக வறுமை விகிதம் 29.2%ல் இருந்து 11.3% ஆகக் குறைந்துள்ளது.
சமூகத் துறை முதலீடுகள் மூலம், இந்தியாவின் வறுமைக் குறைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போஷான் அபியான், சமக்ர ஷிக்ஷா, பிஎம் கிசான், மதிய உணவு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், தூய்மை இந்தியா, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவின் வறுமையை ஒழிக்க உதவி உள்ளது.
உலக அளவில் முன்னிலை வகிக்கும் இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பானது, ஊட்டச்சத்து, கல்வி, வருமான ஆதரவு, சுகாதாரம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு வசதி ஆகியவற்றை மிகப்பெரிய அளவில் வழங்க உதவி உள்ளது. அதேநேரம் இந்தியாவில் உள்ள 20.6 கோடி குழந்தைகளுக்கு, வீடு, சுகாதாரம், குடிநீர், ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம் ஆகிய 6-ல் குறைந்தது ஒரு வசதி கிடைக்காத நிலை இன்னும் நீடிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.