

மும்பை: பணக்காரர்கள் முதலீட்டுக்காக தாங்கள் சேமித்து வைத்துள்ள தங்கக் கட்டிகளை வாடகைக்கு விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் வெளிநாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு பதில், பழைய நகைகள் அல்லது உள்ளூர் சந்தையிலிருந்து கிடைக்கும் தங்கக் கட்டிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பணக்காரர்கள் சேமிப்புக்காக தாங்கள் வாங்கி வைத்துள்ள தங்கக் கட்டிகளை நகைக் கடைக்காரர்களுக்கு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர்.
இதுகுறித்து, தங்கம் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள இணையதளமான சேப்கோல்டு நிறுவனத்தின் தலைவர் கவுரவ் மாத்தூர் கூறும்போது, “சமீப காலமாக பணக்கார முதலீட்டாளர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னிடம் 2 மில்லியன் டாலர் (ரூ.17.7 கோடி) மதிப்பிலான தங்கக் கட்டி உள்ளது, அதை வாடகைக்கு விட முடியுமா என ஒருவர் கேட்டார். இதுபோல மற்றொருவர் என்னிடம் 1 மில்லியன் டாலர் தங்கம் உள்ளது அதை வாடகைக்கு விட உதவுவீர்களா என கேட்டார். இந்த ஆண்டில் எங்கள் நிறுவனத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்ட தங்கத்தின் மதிப்பு 2 மில்லியன் டாலரிலிருந்து 40 மில்லியன் டாலராக (ரூ.354 கோடி) அதிகரித்துள்ளது” என்றார்.
எப்படி வேலை செய்கிறது: தங்கத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்குவது என்பது கடன் கொடுப்பது போன்ற முறையில் செயல்படுகிறது. இங்கு பணம் அல்லது சொத்துக்கு பதில் தங்கம் கைமாறுகிறது. முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை ஒரு குத்தகை தளம் அல்லது நிதி நிறுவனத்திடம் ஒப்படைப்பார்கள்.
அந்த நிறுவனம், தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு தங்கத்தை கடனாக வழங்கும். இதை பெற்றுக் கொள்பவர்கள் குறிப்பிட்ட தொகையை வட்டியாக வழங்குவர். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த தங்கத்தை முதலீட்டாளருக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.